பக்கம்:மர இனப் பெயர்த் தொகுதி 1.pdf/3

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறிமுகம்

தமிழக மக்களின்‌ அகவாழ்விலும்‌, புறவாழ்விலும்‌ மரஞ்‌ செடி கொடிகள்‌ பின்னிப்‌ பிணைந்துள்ளன. இத்தகைய இயற்கை வாழ்வு தொன்று தொட்டு உருவாகி வளர்ந்து வருகிறது.

மலைப்பகுதி வாழ்வை எண்ணிப்‌ பார்த்ததும்‌ 'குறிஞ்சி' எனவும்‌ கடற்பகுதி வாழ்வை எண்ணிப்பார்த்ததும்‌ 'நெய்தல்‌' எனவும்‌ செடியும்‌ கொடியுமே மக்களின்‌ அகத்தைத்‌ தொட்டுணரச்‌ செய்துள்ளன. புறவாழ்வில்‌ வாகை மரமும்‌ உழிஞைக்‌ கொடியும் (புறம்‌. 50, 4) இன்றியமையா இடத்தைப்‌ பெற்றுள்ளன. எப்பொருள்‌கள்‌ மக்கள்‌ வாழ்வில்‌ நீக்கமின்றி நிறைந்துள்ளனவோ அவை மக்கள்‌ பேசும்‌ பேச்சிலும்‌, எழுதும்‌ எழுத்திலும்‌ வெளிப்படையாகவும்‌ உள்ளுறை பொருளாகவும்‌ வழங்கப்பெறும்‌.

கபிலரின்‌ சூறிஞ்சிப்பாட்டில்‌ செடி கொடிகளின்‌ பெயர்கள்‌ எண்ணற்ற சொல்லருவியாய்ப்‌ பெருகிச்‌ செல்வது பண்டைய இலக்கியத்தில்‌ அவற்றின்‌ செல்வாக்கைப்‌ புலப்படுத்தும்‌. 'புல்லும்‌ மரனும்‌ ஓரறிவினவே' என்று கூறிய தொல்‌காப்பிய மரபியல்‌ 'பிறவும்‌ உளவே அக்கிளைப்‌ பிறப்பே' (தொல்‌. பொருள்‌. 572 இளம்‌.) என அதன்‌ கிளைகளையும்‌ சுட்டிக்காட்டும்‌. 'புறக்‌ காழனவே புல்லெனப்‌படுமே' (தொல்‌.பொருள்‌. 630 இளம்‌.) 'அகக்காழனவே மரமெனப்‌ படுமே' (தொல்‌. பொருள்‌. 631 இளம்‌.) என அதன்‌ வகைப்பாட்டைப்‌ பின்னர்‌ விளக்கிக்‌ கூறும்‌. இவற்றின்‌ புற அமைப்பையும்‌, உறுப்பு நிலையையும்‌ நுணுகிக்‌ கண்டறிந்ததைத்‌ 'தோடேமடலே' எனவும்‌ 'இலையே முறியே தளிரே' எனவும்‌ 'காயே பழமே' எனவும்‌ வரும்‌ நூற்பாக்களால்‌ (௸ 631-34 இளம்‌.) அறியலாம்‌. இவ்வாறு இலக்கணத்திலும்‌ இலக்கியத்திலும்‌ மரஞ்‌ செடி கொடிகள்‌ தனியிடம்‌ பெற்று விளங்குவதைத்‌ தமிழர்‌ வாழ்வியல்‌ நன்கு காட்டுகிறது.