பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

197

மாவீரன் மயிலப்பன்= - -

ஆவணங்களிலும் கையெழுத்திட்ட நடுவர்கள் தங்களது இருக்கைகளில் இருந்து எழுந்து வெளியே சென்றனர். கும்பெனியாரின் இந்தக் கபட நாடகம் இப்பொழுதாவது முடிந்ததே என்ற மனநிறைவு மயிலப்பன் சேர்வைக்காரருக்கு ஏற்பட்டு இருக்க வேண்டும். எப்பொழுதும் தனது கைகளையும், கால்களையும் அழுத்தி, இரவும் பகலும் இடர்ப்பாடுகளை ஏற்படுத்தி வந்த சிறை வாசத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டதல்லவா? ஆனால், இந்த கும்பெனியாரது சட்டமும், நீதியும் இடத்திற்கு இடம் மாறுபடும் போல் அல்லவா தோன்றுகிறது!

புதுக்கோட்டைக்காளாப்பூர் காட்டில் கைது செய்யப்பட்ட பாஞ்சாலக்குறிச்சி பாளையக்காரர் வீரபாண்டிய கட்டபொம்மனைக் கயத்தாற்றிக்கு கொண்டு வந்து, திருநெல்வேலிச் சீமை பாளையக்காரர்களது முன்னிலையில் அரை மணி நேரம் "நீதி விசாரணை" என்ற நாடகத்தை நடத்தி அப்பொழுதே (15.10.1798) அவரை அங்கு தூக்கில் இட்டுக் கொன்று ஆங்கிலேயரது சட்டத்தையும் நீதியையும் நிலை நிறுத்தினானே தளபதி பானர்மேன்.

காளையார்கோவில் கோட்டைப் போரில் வெற்றிபெற்ற கும்பெனியார் சிவகெங்கைச் சீமை பிரதானிகளான மருது பாண்டியர்களை ஒக்கூர் காட்டில் துரத்திப் பிடித்து அவர்களை மூன்றே நாட்களில் திருப்பத்துார் கோட்டையில் 24.10.1801ல் தூக்கில் ஏற்றி மகிழ்ந்தான் தளபதி அக்கினியூ.

இவர்களுக்கெல்லாம் முன்னதாக 7.2.1795ல் சூழ்ச்சியினால் இராமநாதபுரம் அரண்மனையைக் கைப்பற்றி, கும்பெனியாரது பரமவிரோதியான இராமநாதபுரம் முத்துராமலிங்க சேதுபதி மன்னரைக் கைது செய்து, அவரைப் பதவி நீக்கம் செய்து இராமநாதபுர சமஸ்தானத்தை கும்பெனியாரது உடமையாக்கி, அந்த மன்னனைச் சிறையிலிட்டு, விசாரணை எதுவும் இல்லாமல் சென்னைக் கோட்டையில் அடைந்து வைத்து வேதனைப்படுத்தி வருகின்றனர்