உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

149

திருச்சிற்றம்பலம்

திருக்குறள் ஆராய்ச்சி

1. 'திருக்குறள்' என்னும் பெயர்க்காரணம்

தமிழ்மொழியில் மிகச் சுருங்கிய வெண்பா யாப்பிற்குக் குறள் என்று பெயர். இஃது எழுசீரான் வந்த இரண்டு அடி உடையது. எழுசீரான்வருங் குறள் வெண்பாவினை ஆசிரியர் தொல்காப்பியனார் குறுவெண்பாட்டு என்பர்.' தமிழில் என்பர்.'தமிழில் இதனினுஞ் சிறிய யாப்புக் காணப்படுவதில்லை. தெய்வப் புலமைத் திருவள்ளுவ நாயனார் தங்கருத்தினை விளக்குதற்கு மிகச் சுருங்கிய இவ்வெண்பா யாப்பினைத் தெரிந்தெடுத்தவா றென்னையெனின்;- மக்கள் உயிர்க்கு இன்றியமையாது வேண்டப்படும் உறுதிப் பொருள்களைத் தங்கூரிய அறிவினான் நன்கு ஆய்ந்து, அவைதம்மை அவர் அறிவிற் பதியச் சுருக்க வகையான் விளக்குதற்பொருட்டு ஆசிரியர் இதனையே எடுத்துக் கொள்வாராயினர். நுண்ணிய பொருள் ஒன்றை ஒருவற்கு விளக்கலுறின், அதனைக் கேட்போன் உணர்வு சலியாவண்ணம் நன்கெடுத்துப் புகட்டுதல் வேண்டும். அவ்வாறன்றிக் கேட்போனுணர்வு இளைப்புற்று ஒழிய வாளாது விரித்துச் சொல்லப்படுமாயின் அப்பொருள் எத்துணை நுண்ணியதாயினும் அஃது அவன் உள்ளத்தின்கண் அழுந்த மாட்டாதாய்ப்போம். மக்களுயிர்க்கு வேண்டப்படும் பொருட்டுறைகளெல்லாம் விரித்துரைப்போமெனப் புகுந்த வடமொழி மிருதி நூல்கள் வரம்பின்றி விரிந்தமையாற்றான் பயன்படுதலின்றி வழக்கு வீழ்ந்து ஒழிந்தன. உயிர்க்கு உறுதிப் பொருள் நாடி அவற்றையெல்லாந் தொகுத்து உரைக்க ஒருப்பட்ட திருவள்ளுவனார் இந்நுட்பம் தேர்ந்து தாங்கருதிய பொருளைக் கருதியவாறே தெரித்தற்குச் சிறந்த கருவியாக இக்குறள் வெண்பாவினால் நூல் இயற்றுவாராயினர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/174&oldid=1579799" இலிருந்து மீள்விக்கப்பட்டது