உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமுதவல்லி நாகநாட்டரசி

265

மறைப்பொருளைத் தெரிந்து கொள்ளு தற்கு மட்டுமன்று, தங்களை வேள்வித்தீமுன் மணந்து கொள்ளும் இன்பத்தைப் பெறுதற்குந் தம்மை தகுதியு டையராக்கிக் கொள்ளல்

வேண்டுமென்பது மெய்யாகவே இறந்து போங்காலத்தும், அம்முதியகோச்செங்கண் மன்னர்க்கு விருப்பமாயிருந்தது. எனினும், உங்கள் உள்ளன்பு வேறொரு முகமாய் முன்னமே செலுத்தப்பட்டிருக்குமானால்--அல்லது இல்லறக்கடலைக் கடக்குந் திருமணக் கப்பலில் ஏறுவது தங்கட்கு வெறுப்பாக இருக்குமானால் தங்கள் அரசியலை அங்ஙனம் ஒப்புவிக்க வேண்டுவதில்லை. உரிமைப்படி அஃது உங்களுக்கே உரியது-- மூத்த கிளை வழியில் வந்த உங்களுக்கே அஃது உரியதாகும்-- நீங்களே அதனை வைத்திருக்கற்பாலீர்கள்!" என்று மனோகரர் மறுமொழி புகன்றார்.

மாட்சிமிக்க மனோகரர் நீள இவற்றைச் சொல்லுகையில் நாணங் கலந்த மனக் குழப்பத்தினால் குமுதவல்லி வாய்பேசக் கூடாமல் அடைபட்டிருந்தாள்--இவள் முகத்தின் கண் உள்ள நிறமோ புடைபெயர்ச்சி நன்கு புலனாகாதபடி வருவதும் போவதுமாய் இருந்தது; வாய் பேசாமல் இவள் இச்சொற்களை உற்றுக் கேட்கையில் இவளது மார்பகமோ மெல்லெனச் சிறிதே ஏறியிறங்கிக் கொண்டிருந்தது. முன்னமே இவள் நீலலோசனனி டத்துக் கொண்ட ஓர் உணர்ச்சியை இம்முதியோன் கூறிய சொற்கள் இவளது ஆழ்ந்த நினைவின்கண் எழுப்பி விட்டன.சிறு குழந்தையைப் போற் கள்ளம் அறியாதவளாயிருந்தும் இவள் இப்போது தான் காதல் என்பதன் முதல் எழுத்துக்களைப் பயிலத் தாடங்கினாள். அவளது நெஞ்சத்தினுள் அமைதியாய் மெல்லத் தோன்றிய ஒரு பதைப்பானது, மனோகரர் கூறிய சொற்கள் இன்பத்தைப்பிறப்பிக்கும் ஒரு நரம்பின் அசைவினை விளைவித்ததென்று அவளுக்கு அறிவிப்பதாயிற்று.

“என் அன்பிற்குகந்த, மாட்சிமை மிக்க மனோகரரே,” என்று அவள் கடைசியாகத் தன் மெல்லிய இனிய குரலில், கீழ்க்கவிந்த விழிகளோடுங் கூறுவாள்: "என் உள்ளன்பானது இதற்குமுன் எங்குஞ் செலுத்தப்பட்டிலது-- என்னையெனின், இதற்குமுன் யான் என்றும் நினையாத ஒரு செய்தியைப் பற்றித் தாங்கள் குறிப்பிட்டீர்களே; புதிதாகக் கண்டு கொள்ளப்பட்ட என்மைத்துனரோடு யான் சிறிதும் பழகியிராவிடினும், அவர் தம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/294&oldid=1581665" இலிருந்து மீள்விக்கப்பட்டது