உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282

❖ - 13❖ மறைமலையம் – 13

66

வாழ்வாங்கு வாழ்ந்தவர்

(வாழ்க்கைச் சுவடுகள்)

கற்றவர் பயிலும் நாகைக் காரோணம்” என்று இற்றைக்குச் சற்றேறத்தாழ 1300 ஆண்டுகட்கு முன்னரே செந்தமிழ்ச் சிவநெறிச் சான்றோர் ஆகிய திருநாவுக்கரசரால் புகழ்ந்தோதப் பெற்ற சிறப்புடையது நாகப்பட்டினம். “பொன்னிநாடு எனும் கற்பகப் பூங்கொடி மலர்போல் நன்மை சான்றது நாகப்பட்டினத் திரு நகரம்” என ஆசிரியர் சேக்கிழார் இதனைப் போற்றிப் பாராட்டியுள்ளார்.

இத்தகைய சிறப்புடைய நாகப்பட்டினத்தைச் சேர்ந்த, காடம்பாடி (காடவர்கோன்பாடி) என்று ஒரு பகுதி உள்ளது. பொழில்கள் பல சூழ்ந்து எழில் நிறைந்த தூய இனிய அந்தச் சிற்றூரில் சோழியச் சைவ வேளாளர் குலச் செம்மலாய் சொக்கநாதபிள்ளை வாழ்ந்து வந்தார். அவர்,நாகப்பட்டினத்தில் அறுவை மருத்துவத் (Surgeon) தொழில் புரிந்து சிறந்து, சல்வராகத் திகழ்ந்தார். நாகப்பட்டினத்திலும் அவருக்கு ஒரு வீடு இருந்தது. அதன்கண் அவர் தம் காதற்கினிய அருமை மனைவியாராகிய சின்னம்மை என்பவருடன் நன்கினிது இல்லறம் நடாத்தி வந்தார். எல்லா நலங்களும் இனிதமையப் பெற்றிருந்த இவ் விருவருக்கும் மகப்பேறு வாய்க்காத ஒரு குறை மட்டும் இருந்தது.

மகப்பேறு எய்துதல் வேண்டி, அம்மையார் எத்துணையோ பல நோன்புகள் ஆற்றினார்; நேர்த்திக்கடன்கள் மேற்கொண்டார்; இறையருளை வேண்டிப் பாடுகிடந்தார். இவர் தம் இல்லத்திற்குச் சிறந்த சிவநெறித் துறவியார் ஒருவர் எழுந்தருளினார். அவர்தம் தூய ஏற்றமும் தோற்றமும் கண்ட இருவரும் அவரை இன்முகங்காட்டி, நல்லுரை கூறி வரவேற்றனர். அறுசுவை அமுதூட்டி விருந்தோம்பி மகிழ்ந்தனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/311&oldid=1581807" இலிருந்து மீள்விக்கப்பட்டது