உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பின்னிணைப்பு

285

வளமும், பீடு நடையும், திருமுகப் பொலிவும், தோற்றத்தின் ஏற்றமும் கண்டாரெல்லாரும் தம்மை மறந்து வியப்பும் மகிழ்வுங் கொள்ளுமாறு விளங்கினார்.

இத்தகு சிறந்த இளைஞராம் அடிகட்குச் சின்னம்மை திருமணம் முடிக்க எண்ணினார். பெண்ணைத் தேர்ந்து கொள்ளும் உரிமையை மகனுக்கே வழங்கினார். குழந்தைப் பருவம் முதல் குறும்பு செய்து கூடி விளையாடிய ஒன்றுவிட்ட மாமன் மகள் சவுந்தரத்தைத் தம் வாழ்க்கைத் துணைவியாக்கிக் கொள்ள அடிகள் உளங் கொண்டார்.அடிகளாரது உளப்படியே தி.பி.1924 (கி.பி. 1893) இல் திருமணம் மிகச் சிறப்பாக நிகழ்ந்தது. அதுபோது அடிகளாருக்கு அகவை -17.

அடிகள் தம் பதினெட்டாம் அகவையில் ஒரு பெண் மகவுக்குத் தந்தையாயினர். அக்காலை ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான சீவகசிந்தாமணியில் அடிகள் உள்ளம் தோய்ந்திருந்தார். அவ்வுளப்பாங்கோடு தம் மகளுக்குச் சிந்தாமணி எனப்பெயரிட்டு மகிழ்ந்தார். அடுத்தடுத்துச் சில குழந்தைகள் பிறந்திறந்தன. சென்னை வாழ்க்கையின் போது பிறந்த பெண்குழந்தைக்கு நாகப்பட்டினத்திறைவியின் பெயரை நினைவு கூர்ந்து நீலாம்பிகை எனப் பெயரிட்டு உவந்தார் அடிகள். அடிகளாருக்குத் தனித்தமிழ் இயக்க எண்ணம் தோன்றக் காரணமாக இந்நீலாம்பிகையாரே அமைந்தார்கள். நான்கு ஆண் மக்களைப் பெற்ற அடிகளார் சைவ சமயக் குரவர் பால் கொண்ட ஆழ்ந்த பற்றின் வெளிப்பாடாய்த் திருஞானசம்பந்தம், மாணிக்க வாசகம், திருநாவுக்கரசு, சுந்தரமூர்த்தி எனப் பெயரிட்டார்கள்.

தமது இயற்றமிழ் ஆசிரியராகிய புத்தகக்கடை வே. நாராயணசாமிப் பிள்ளை அவர்கள் வாயிலாக அடிகளார் பேராசிரியர் மனோன்மணீயம் பெ. சுந்தரம் பெ. சுந்தரம் பிள்ளை அவர்களைப் பற்றிக் கேள்வியுற்று அறிந்தார். அகவற்பாவில் அவருக்கு அழகிய முடங்கல் விடுத்தார். அது கண்டு மகிழ்ந்த பிள்ளையவர்கள் விரும்பியவாறு, தாமும் தம் ஆசிரியருமாகத் திருவனந்தபுரம் சென்று (நவம்பர் 1895) அவரைக்கண்டு அளவளாவி மகிழ்ந்தார்.

பின்னர் ஒருமுறை தி.பி. 1927 (கி.பி. 1896) ஆம் ஆண்டில் சுந்தரம் பிள்ளை அவர்கள் அடிகளார்க்கு எழுதி, அவரைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/314&oldid=1581832" இலிருந்து மீள்விக்கப்பட்டது