உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9

அதிகாரம் - 1

வழி நடந்து போகும் இளைஞன்

உலகத்தில் மிகச்சிறந்த மலை நாட்டைப் பற்றி வருணித்துச் சொல்லப் போகின்றோம். தெற்கேயுள்ள குமரிமுனையிலிருந்து மேற்குக் கடற்கரைப் பக்கமாய் வடக்கு நோக்கிச் செல்லுகின்ற மேற்கணவாய் மலைத் தொடர் என்பது ஒன்றுண்டு. இம்மலைத் தொடரில் நீலகிரி மலைக்கு அருகாமையில் உள்ள மலைநாடு இயற்கையமைப்பிற் காணப்படும் வளங்கள் நிரம்பி மிகப் பொலிந்து விளங்குகின்றது. வளைந்து வளைந்து ஓடுங் கான் யாறுகளாலும் தெளிந்த அருவியோட்டங்களாலும் நீர் ஊட்டப்படும் பூக்கள் நிறைந்த வெளிநிலங்களும், இனிப்பான பழங்கள் நிறைந்த தோப்புகளால் மூடப்பட்ட மேட்டு நிலங்களும், காட்சிக்கு இனிய பசும்புல் செழிப்பாய் வளர்ந் திருக்கும் பள்ளத்தாக்கான நிலங்களும். வழிநடைப்பயணம் போகின்றவர் களுக்குப் பெரு மகிழ்ச்சி தருகின்ற மலைகளின் இடையிலுள்ள வழிகளும் வானில் மீன்கள் விளங்குதல் போலப் பல்லாயிரம் பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் மென்புல் வளர்ந்து உயர்ந்த பொற்றைகளும். பஞ்சு, சணல், நார்ப்பட்டு முதலியன மண்டி வளர்ந்து காற்றால் அலையுங் கொல்லைகளும் ஆங்காங்குக் காணப்படுகின்றன. இன்னும் அங்குள்ள தோப்புகளின் உள்ளே நுழைந்து காண்பேமாயின் மாதுளம்பழம், பலாப்பழம், மாம்பழம், நாரத்தம்பழம் முதலியவற்றைச் சுமைசுமையாய்த் தாங்கி நிற்கின்ற மரங்கள் அடர்ந்து இருப்பது காணலாம். அங்குள்ள மலைகளினிடையிற் சந்து வெளிகளிலே உள்ளுருவிப் போய்க் காண்பேமாயின் இரண்டு பக்கங்களிலுங் குலை குலையாய்ப் பழங்கள் தொங்குகின்ற தீவிய திராட்சைக் கொடிகள் பின்னல் பின்னலாய்ப் பிணைந்திருத்தல் காணலாம். அகன்ற இலைகளை விலக்கிக் கொண்டு புறந்தோன்றிக் கிடக்குங் கொம்மட்டிப் பழங்கள் பழுத்த கொடிகள் தாமே எப்பக்கத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/38&oldid=1581292" இலிருந்து மீள்விக்கப்பட்டது