உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278

மறைமலையம் -14

மனம் உவந்த மாட்சியுடைய காதலரிலுஞ் சிறந்த தெய்வம் இல்லை. அவர் வழிநின்று தமது கற்பொழுக்கத்தைக் காத்தலே அம் மகளிர்க்குச் சிறந்த கடமை. தெய்வத்தின் திருவடியைப் பிடித்தோர் மற்ற உலகத்துப் பற்றுகளை யெல்லாம் முற்றத் துறத்தல்போலத்,, தம் காதலர் அன்பிற் பிணிப்புண்ட மகளிருந் தம் பெற்றார் உற்றார் எல்லாரையும் முற்றத் துறத்தலே செய்யுங் கடமை யுடையர்’. என்று எண்ணிப்பார்த்து மிகுந்த வருத்தத்தோடும் உன்னை விட்டகன்று என்காதலருடன் பம்பாய்க்குப்போய், அங்கே அவர் பெற்றார் உற்றார் உறவினரெல்லாராலும் அவர்க்கேமணஞ் செய்விக்கப் பெற்றேன். மணஞ் செய்துகொண்ட பிறகாவது நீ மனம் இசைவாய் என்று நினைத்து உன்னைவந்து வணங்கி உன்னையும், என் தந்தையுந் தமையனுந் திரும்பி வீடுவந்து சேர்ந்திருந்தால் அவர்களையும் எங்களோடு அழைத்துப்போகலாமென்று விரும்பி என் கணவரும் நானும் பின்பு சில மாதங்களில் திரும்பிச் சென்னைக்கு வந்தோம்.என்கணவனார் நாமிருந்த வீட்டிற்குப்போய்ப் பார்க்க நீயும் அங்கில்லாமல் எங்கோ போய்விட்டது தெரிந்து, அண்டை அயலாரை எவ்வளவோ கேட்டுப்பார்த்தும் நீயும் அப்பாவும் அண்ணாவும் போனஇடஞ் சிறிதுந் தெரியவில்லை யென்று வந்து சொன்னார். அச்செய்தியைக்கேட்டு என்உள்ளம் பட்டபாடு இறைவனே அறிவான். பின்னரும் ஆறுமாதம் வரையிற் சென்னையிலேயே தங்கியிருந்து உங்களைப்பற்றி நாடோறும் பலரைக் கேட்டுப்பார்த்தோம், பல இடங்களில் தேடியும் பார்த்தோம். நீங்கள் போனவகை ஒன்றுமே தெரியவில்லை. என் தமக்கையிடம் வளரும் எங்கள் பிள்ளை களைப் பார்த்து, அவைகள் நாங்கள் பெற்றுக்கொண்டு போகவழி யுண்டாவென்று பலகாலும் ஆராய்ந்துபார்த்தோம். என் தமக்கை கணவரிடத்தும் அவர் தம் குடும்பத்தாரிடத்துஞ் சென்று எங்களை இன்னார் என்று தெரிவித்துக் கொள்வது தக்கதாய்த் தோன்றவில்லை. மேலும், என் தமக்கை

கணவரை

நான்பார்த்ததேயில்லை. அல்லாமலும், அவர்களெல்லாருஞ் சாதிப்பற்று நிரம்பஉடையவர்களாதலால், அவர்கள் என் கணவரை இழிவாக நடத்துவர் என்னும் அச்சமும், யான் அயற் சாதியில் ஒருவரை மணந்துகொண்டதனைக் குறித்து அவர்களெல்லாரும் என்னைப் பார்ப்பதற்கும் மனம் இசையார் என்னும் நம்பிக்கையும் யாங்கள் அவர்களிடஞ் செல்லாதபடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/307&oldid=1582607" இலிருந்து மீள்விக்கப்பட்டது