உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212

மறைமலையம் 16

கூற்றுச் சிறுமகாரும் நகையாடற்பாலதாகவே யிருக்கின்றது! அதுநிற்க.

66

யாம் திருவாசகத்திற்கு உரை எழுதப்புகுந்த காரணம் இது: யாம் விரிவுரை நிகழ்த்தச்சென்ற பல இடங்களிற் பலர் தேவார திருவாசகங்களைப் பொருள் தெரியாமல் ஓதக் கேட்டேம். அங்ஙனம் ஓதியவர்கள் பாட்டுகளுக்குப் பொருள் அறியாமையி னாலும், சொற்றொடர்களைச் சந்திபிரிக்கத் தெரியாமை யினாலும் சொற்களையும் சொற்றெடர்களையும் மிகவும் வழுப்படக்கூறினர். அவர்களை நோக்கி இங்ஙனம் ஓதுகிறீர்களே, இவற்றிற்குப் பொருள் என்ன?' என்று கேட்டேம். அதற்கு அவர்கள் “தேவார திருவாசகங்களுக்குப் பொருள் சொல்லவுங்கூடாது, கேட்கவுங் கூடாது என்ற சொல்லுகிறார்கள். அதனால் நாங்கள் அவற்றைப் பொருள் தெரியாமலே பாராயணம் பண்ணுவது வழக்கம்' என்றார்கள். அதற்கு யாம் “பொருள் தெரியாமையாற் சொற்களையுஞ் சொற்றெடர்களையுந் தாறுமாறாகப் பிழைபடுத்திச்சொல்வது

குற்றமோ, பொருள்தெரிந்து அவற்றைத் திருத்தமாகச் சொல்வது குற்றமோ?” என்று வினாவினேம். அதற்கு அவர்கள் "பொருள் தெரியாமல் பிசகாகச் சொல்லுவதுதான் குற்றம்." என்று ஒப்புக் கொண்டு விடைகூறினார்கள். இவ்வாறே யாம் சன்ற இடங்களி லெல்லாம், பொருள்தெரியாமையால் தேவார திருவாசகச் செழுந்தமிழ்த் தெய்வப்பாடல்களைப் பெரிதும் பிழைபட ஓதுவார் பலரைக்கண்டு வருந்திய வருத்தமே கடைசியாக இதற்கோர் உரை வகுக்கவேண்டு மென்னும் எண்ணத்தை எம்பால் எழுப்பவிட்டது. அது நிற்க.

இனிப் பேரறிவினரான மாணிக்கவாசகப்பெருமான் அருளிச் செய்த திருப்பாட்டுக்களின் பொருள் ஆழத்தினைச் சிற்றறிவினராகிய நாம் கண்டுணர்தல் ஏலாதாதலின், இதற்கு நாம் உரை வகுத்தல் ஆகாதெனின்; மாணிக்கவாசகப்பெருமான் இலக்கண இலக்கிய வரம்புக்கும் அறிவுநூல் வரம்புக்கும் அடங்காமல் நூல்செய்தனராயின், அத்தகைய நூற்பொரு ளைக் கண்டுணர்தல் இயலாததேயாம். மேலும், இலக்கண

லக்கிய அமைதியும் அறிவுநூல் வரம்பும் இகந்து நூல் இயற்றுதல்தான் ஆகுமோவெனின் அதுவும் ஆகாது;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/237&oldid=1583988" இலிருந்து மீள்விக்கப்பட்டது