உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருத்தோவியம்

285

இன்பவுருவினில் தமது இன்ப உணர்வினைத் தோய்வித்துப், 'பெற்ற சிற்றின்பமே பேரின்பமாய் அங்கே, முற்றவரும் பரிசு உந்தீபற' என்ற ஆன்றோர் திருமொழிப்படி தம்மைப் புனிதராக்குதலே காதலன்பிற்றிளைக்கும் ஆண் பெண் என்னும் இருபாலாரும் செயற்பாலதொரு பெருங்கடமை யாம். இங்ஙனம் பழகுவார்க்கு இம்மை மறுமை இரண்டும் பேரின்பவுருவேயாவதல்லது சிற்றின்ப மாதல் சிறிதுமில்லை. இவ்வுண்மை தெரித்தற்கே நமது செந்தமிழ் மொழியில் அகப்பொருள் இலக்கணங்களும், திருச்சிற்றம்பலக் கோவை யாரும், திருக்குறட் காமத்துப் பாலும் பேரறிவுடைய சான்றோரால் இயற்றப்பட்டன. உலகத்தின்கட் காணப்படும் அமைப்புகளை உற்றுணருந்தோறும் அவற்றால் வரும் இன்பங்களை நுகருந்தோறும் அவற்றைத் தந்த இறைவனை நினைந்து அவன்பால் அன்புமீதூரப் பெறுதல் ஆறறிவுடைய மக்கட்கு இயற்கையிலே உளதாதல் வேண்டும்.

இனி, அவர்கள் அவனை நினையாமற் பல பெருந் தீமைகளைச் செய்து ஒழுகுதல் அவர்களுடைய குற்றமே யல்லாமல், இறைவன் வகுத்த அமைப்புகளின் குற்றம் அன்றாம். உண்டற்கினிய பாலும் பழனும் அளவும் பொழுதும் அறிந்து உண்பானுக்கு இன்பத்தைத் தருகின்றன; அவ்வாறன்றி அளவுக்கு மிஞ்சிப் பொருந்தாக் காலத்தே உட்கொள்வானுக்கு அவையே துன்பத்தைத் தருகின்றன; இதனைக் கண்டு பாலும் பழனும் ஆகா என்பார் உளரோ? இங்ஙனமே கல்வியுஞ் செல்வமும் தம்மை முறையறிந்து பயன்படுத்தாதவனுக்குத் தீமையைத் தருகின்றன; அதனால், அவையும் ஆகா என்பார் உளரோ? ஆதலால், இம்மையின்பங்கள் எல்லாவற்றுள்ளுஞ் சிறந்ததாகிய காதலின் பத்திற்குரிய மகளிர் சேர்க்கையும் முறையறிந்து பயன்படுத்தாதார்க்குத் துன்பத்தையுந் தரும்; அதுபற்றி அவ் வின்பமும் அதற்குரிய அம் மகளிரும் கழப்படுவார் அல்லர்.

உயர்ந்த காதலின்பத்திற் படியுந்தோறும் எல்லாம்வல்ல சிவத்தின் இன்பநிலையே நினைவில் மேன்மேற் சுரந்தெழுதல் வேண்டும். இந்நிலையில் நின்றதுபற்றியே சுந்தரமூர்த்தி நாயனார் இறைவற்கு மிக அணுக்கராய் நின்றனர். உயர்ந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/310&oldid=1584071" இலிருந்து மீள்விக்கப்பட்டது