உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27

1. முருகவேள் கண்ட காட்சி

நான் சிற்றூரில் இருந்த பொழுது ஒரு பார்ப்பன இளைஞன் எனக்குச் சிறந்த நண்பனாயினான். இவ்விளைஞன் பார்வைக்கு நல்ல தோற்றம் உடையனாயுஞ் சிறு குழந்தையைப் போல் இனிய இயல்பு உடையவனாய், இசை பாடுவதில் வல்லனாயும் இருந்தனன். அவனுடைய அமைதித் தன்மையும் இசைபாடும் வல்லமையும் என் உள்ளத்தைக் கவர்ந்தன. எனக்கு அகவை இருபது ஆண்டு; அவ்விளைஞனுக்கு பதினைந்து ஆண்டு இருக்கும். அவனும் எனக்குத் தமிழ் மேலேயுள்ள பயிற்சியினையும் எனது நல்ல தன்மையினையுங் கண்டு விரும்பி என்னை மிக நேசித்தான். இவ்வாறு எமக்குள் என்றும் நெகிழப் பெறாததொரு மனவொருமை உண்டாவதாயிற்று. எமக்குள் விளைந்த அன்பு ஒருநாளைக் கொருநாள் மேன்மேன் முதிர்ந்து பெருகவே, யாம் ஒருவரை யொருவர் ஓர் இமைப்பொழுது பிரிந்திருப்பினும் அவ்வொருபொழுதும் ஓர் ஆண்டுபோல் தோன்றாநிற்கும். நாங்கள் இருவேருஞ் செல்வர் ஒருவர் இல்லத்தின்கண் இனிது விருந்தோம்பப் பெற்றிருந்தே மாதலால், நாள் முழுதும் பிரியாமல் ஓரிடத்தில் ஒருங்கிருந்து பல நற்பொருள்கள் பேசி அளவளாய்க்கொண்டு நாட்கழிப்பே மாயினேம். சிலநேரம் அவ்விளைஞன் தாயுமானசுவாமிகள் பாடல்கள், கடவுள்பால் அன்பு மிகுக்குந் தெலுங்குப் பண்கள் முதலியவற்றைக் குயில்போல் மனங்குழையப் பாடி என்னை மகிழ்விப்பான்; யான் அவனுக்குச் சில பொழுது திருவிளை யாடற் புராணச் செய்யுட்களுக்கு உரைவிரித்துச் சொல்லித் தமிழினருமை பெருமையினை நன்கு விளக்குவேன். அவனுந் தமிழின் இனிமையினை மிக வியந்து தமிழ்ப் பாட்டுகளுக்கு உரைகேட்டலில் மிகவும் விழைவு கொண்டான்.யானோ அவன் பாடும் இனிய ஓசையில் அறிவு இழுப்புண்டு விசைமுறை அறிதலில் நிரம்பக் கருத்தூன்றி கேட்பேன். இங்ஙனம் எமக்குள்

6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/52&oldid=1583478" இலிருந்து மீள்விக்கப்பட்டது