உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

மறைமலையம் 17

வலிந்து புகுத்தப்படுத லாகாது. அன்றி அங்ஙனம் புகுத்தப்படு மாயின் அவை அம்மொழியில் நிலைபெற்று உயிர் வாழா இருவர் தமக்குள் தோன்றிய நேசத்தால் ஒருங்கு ஒட்டி உயிர் வாழ வேண்டுமே யல்லாமல், பிறரால் வலிந்து பொருத்தப்பட்டு அவர் ஒன்றுபட்டிருத்தல் இசையாது. இவ்வியல்பு மொழிகளின் சேர்க்கையிலும் பிறழாமல் அமைந்திருப்பதொன்றாம். ருமொழி வழங்கும் ஒருதேயத்தில் உள்ளார் புதிதாக ஒரு பண்டத்தைக் கண்டுபிடித்துச் செய்து அதற்குத் தமது மொழியிற் பெயரும் இட்டுப் பிறகதனை வேறு தேயங்களிற் காண்டுபோய் விலைப்படுத்துங்கால், அப்பண்டத்தின் பெயர் வேறு மொழியிற் கலத்தல் இயற்கையேயாம். இத்தகைய நிகழ்ச்சிகளிலுங்கூடப் புதுப் பண்டங்கள் வாங்கும் மற்ற நாட்டவர் நாகரிகமும் உயர்ந்த அறிவும் உடையவராயிருந்தால், அவற்றிற்குத் தமது மொழியிலே புதுப்பெயரிட்டும் வழங்குவர். மேல் நாட்டிலிருந்து வந்து இத் தென்னாட்டில் விலையாகுந் தெளிவான ஒருவகை மட்பாண்டத்தைக் கிளாசு என்றுங் கோப்பை என்றும் இச்சொற்கள் ஆங்கிலச் சொற்களின் திரிபுகளாகும்; இப்பாண்டங்கள் மேல் நாட்டிற் செய்யப் பட்டனவாய்த் தமிழ்நாட்டிற்குப் புதியனவாய் இருத்தலால், இவற்றிற்குரிய ஆங்கிலச் சொற்களைத் தமிழர் தாமும் எடுத்தாளுதல் பொருத்தமேயாம்; இப்பாண்டங்களையுங் கூடத் தமிழறிவு மிக்கவர்கள், 'கண்ணாடிக்குவளை' பீங்கான் கிண்ணம்' என்று தமக்குரிய தமிழ்ச் சொற்களாலேயே வழங்குவர். ‘எஞ்சின்’, ‘டிரெயின்’, ‘டிக்கெட்டு’, 'டிராம்ஞ், ‘ஸ்கூல்', ‘கமிஷன்' ஏஜெண்டு', 'ஷாப்பு’, ‘மார்க்கெட்டு', முதலான ஆங்கில மொழிகளைப் பொதுமக்கள் அவற்றிற்கு முறையே ‘பொறி’, ‘வண்டித் தொடர்’, 'சீட்டு', மின்சாரவண்டி', ‘பள்ளிக்கூடம்’, ‘தரகன்’, ‘கடை’, ‘அங்காடிக்கடை' முதலான தமிழ்ச் சொற்களையே இட்டு வழங்குவர். கல்வியறிவும் நாகரிகமும் வாய்ந்தவர்கள் இங்ஙனம் பிறநாட்டுச் சொற்களை எடுத்து வழங்க வேண்டிய இடங்களிலும் அவற்றிற்கு ஈடாகத் தமது மொழியிலுள்ள சொற்களையே நடைபெற விட்டு வாழ்வர்.இவ்வாறு செய்தல் அவர்க்குள்ள முயற்சியின் திறத்தையும் நாகரிகச் சிறப்பினையுந் தமது மொழியில் வைத்த பற்றினையும் வெளிப்படையாகக் காட்டுவதாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/111&oldid=1584317" இலிருந்து மீள்விக்கப்பட்டது