உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

மறைமலையம் 17

உலக வழக்கிற் பயிலவிடுதற்கு வழியாய் இருத்தலின் அது குற்றமாய்க் கொள்ளப்படுதலாகாதெனின், இறந்துபோன வடமொழியின் சில சொற்களை உயிர்ப்பிக்கின்றேன் என்று புகுந்து பன்னூறாயிரம் மக்களுக்குப் பயன்பட்டு வழங்கி உயிரோடு உலாவிவருந்தமிழ் மொழியின் சொற்களை இறக்கச் செய்தல் எள்ளளவும் பொருந்தாது. கையிலுள்ள பெருந் தாகைப் பொருளைக் கடலிற் கொண்டுபோய் எறிந்துவிட்டு, நிலத்தை அகழ்ந்து அடியிலுள்ள பொருளை எடுக்க முயல்வார், திறத்திற்குந் தமிழ்ச் சொற்களைக் கைந்நெகிழ விட்டு வடசொற்களை வருந்திச் சொல்ல முயல்வார் திறத்திற்கும் வேறுபாடு சிறிதுங் காண்கிலேம். வடமொழியைத் தனியே முழுதும் உயிர்ப்பிக்க முயன்றாலும் அதனைச் சிறிது பயனுடையதென்று சொல்லலாம். அங்ஙனஞ் செய்ய இயலாது அதன் சொற்கள் சிலவற்றை மட்டும் உயிரோடுலவுஞ் சிறந்த மொழியில் வலிந்து புகுத்தி அம் மொழிக்குக் கேடு சூழ்தல் பெரிதும் இழிக்கத்தக்க தொன்றாகும். இன்றியமையா இடங்களில் வட சொற்கள் சிலவற்றை எடுத்தாளுதல் வழுவென்று யாங்கூறவில்லை. பொருள்களைக் குறிப்பிடுவதற்கு ஏ ஏராளமான தமிழ்ச் சொற்கள் இருக்கையில், அவற்றை விடுத்துப் பிறவற்றைப் புகுத்தலையே பெரியதொரு குற்றமாக நினைக்கிறோம். பிற சொற்களை எடுத்து வழங்குதற்கு இன்றியமையா இடங்கள் என்பன, புதுப் பொருளைக் கூறுதற்குத் தமிழில் உள்ள சொற்களை எவ்வளவு முயன்று பார்த்தும், அதற்கு அவை இசையாத நேரங்களேயாம். முயற்சியும் அறிவும் உடையவர்கள் கருத்து வைத்தால் எத்தகைய புதுப் பொருள்கட்குந் தமிழிலேயே பெயரமைக்கலா மென்பதே நமது கொள்கை. உயிரோ டுலவிவரும் மொழிகள் எவையாயிருப்பினும், அவை எத்துணை ஏழைமை யுடைய வாயினும் அவற்றிற்குரியோர் உண்மைப் பற்றுடையராய் அவற்றை அங்ஙனம் வளம்பெறச் செய்து வருகுவராயின் அதனால் அவர் உயரமான அறிவும் நன் முயற்சியும் மேன்மேல் மிகப் பெற்றுத் தாமுந் தம் மினத்தாரும் உயர்வர்.

இனி, இவ்வாறன்றி இக்காலத்துப் பார்ப்பன மாந்தர் போல் வடமொழிச் சொற்களையும் ஆங்கிலம் முதலான ஏனை மொழிச் சொற்களையுந் தமிழின் இடையிடையே கலந்து பேசுவோர், தூய தமிழ்ப் பேசும் மற்றைப் பெரும்பாலாரின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/113&oldid=1584319" இலிருந்து மீள்விக்கப்பட்டது