உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவுரைக்கொத்து

இயற்கையும் உடையவர்களே உண்மையான உடையவர்களென்று அறிந்து கொள்ளுங்கள்.

177

அழகு

நம் பெண்பாலாரில் எத்தனையோ பெயர் அருவருக்கத் தக்க அறியாமையுந் தீயதன்மையுந் தீய செய்கையும் உடையரா யிருந்தும், இவற்றைத் திருத்திக் கொள்ளச் சிறிதேனும் முயற்சி செய்யாமல் உயர்ந்த ஆடை அணிகலன்கள் அணிந்து தம் முடம்பை மினுக்குவதில் மட்டுமே மிகுந்த கருத்து வைத்தவரா யிருக்கின்றார்கள். இதனால் நம்மவர்க்கு ஆடை அணிகலன்கள் வேண்டுமென்பதை நாம் மறுக்கவில்லை. என்றாலும் வெளியே யுள்ள உடம்பை அழகு செய்வது இரண்டாந்தர மாகவும், உள்ளேயுள்ள நம் அறிவையும் நினைவையும் அழகு செய்வது முதற்றரமாகவும் வைத்துப் பழகிக்கொள்ள வேண்டும்.

ஒரு வீட்டின் முன்வாயிலைக் கூட்டி மெழுகிக் கோல மிட்டுப் பூச்சாத்தி விளக்கிட்டு அழகுபடுத்துவது போலவே, டு அவ்வீட்டின் உள்ளேயும் அங்ஙனமே துப்புரவு செய்து வைக்க வேண்டாமா? முன்வாயில் மட்டும் அழகாயிருக்கும்படிஒப்பனை செய்து வைத்து உள்ளே சென்று பார்த்தாற் குப்பையுங் கூளமும் முடைநாற்றமும் இருளும் மலிந்து கிடக்கவிட்டிருப்பது எவ்வளவு அருவருப்பை உண்டாக்குவதாகும்! இதுபோலவே நாம் நமதுடம்பை எவ்வளவுதான் ஒப்பனை செய்து அழகு படுத்தினாலும், நமது உள்ளத்தையும் அங்ஙனமே அறிவினாலும் நல்ல நினைவினாலும் அழகுபடுத்தி விளங்கச் செய்யாவிட்டால் அது சிறிதாயினும் பயன்படமாட்டாது, நாம் பெறும் பிள்ளைகளும் உயர்ந்தவராக மாட்டார்கள்.

உலகத்தில் மிகச் சிறந்து விளங்கிய மேன்மக்களைப் பெற்ற தாய்மார்களெல்லாரும் அறிவாலும் நாகரிகத்தாலுஞ் சிறப்புற்றி ருந்தார்களென்பதைப் பழைய வரலாறுகளில் நாம் படித்தறிந் திருக்கிறோம். தாய் எத்தன்மை யுடையளாயிருக்கின்றாளோ, அவர் பெற்ற மக்களும், அத்தன்மையுடையவர்களாய்த் தோன்றுகிறார்கள்; இதற்கு "தாயைப் போற் பிள்ளை நூலைப்போற் சீலை,” “தாயைத் தண்ணீர்த் துறையிற் பார்த்தாற் பெண்ணை வீட்டிலா போய்ப் பார்க்க வேண்டும்?” என்னும் பழமொழிகளே சான்றாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/202&oldid=1584447" இலிருந்து மீள்விக்கப்பட்டது