உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறுப்புக்கு மறுப்பு

223

களானாற் சாதிப்பேச்சும்; பெண் கொடுக்கல், வாங்கலைப் பற்றிய பேச்சும்; அவன் சாதிகெட்டவன், அவனுக்கும், நமக்கும் உறவு கிடையாது, எங்கள் சாதி உயர்ந்தது, எங்கள் சாதியில் ஒடித்தாற் பால் வடியும், எங்களிற் பத்து வீட்டுக்காரரோடுதான் நாங்கள் கலப்பது வழக்கம், மற்றவர்கள் கையில் தண்ணீர்கூட வாங்க மாட்டோம் என்னும் பேச்சும் ; அதைவிட்டாற் பொருள்தேடும் வகைகளைப்பற்றிய பேச்சும்; அதுவும் விட்டால் தமக்குப் பொருள் சேருங்காலத்தைப் பற்றியும், நோய்தீரும் நேரத்தைப் பற்றியும், மணம் ஆகும் நாளைப் பற்றியும் எந்த இடத்திற் போனாற் குறி கேட்கலாம், எந்தத் தெய்வத்துக்கு ஆடு கோழி அறுத்தால் இவை கைகூடும்? மாரியைக் கும்பிடலாமா? மதுரை வீரனைக் கும்பிடலாமா? காளியைக் கும்பிடலாமா கருப்பண்ணனைக் கும்பிடலாமா? எசக்கியைக் கும்பிடலாமா? சுடலைமாடனைக் கும்பிடலாமா? என்னுஞ் சிறு தெய்வச் சிற்றுயிர்க்கொலைக் கொடும் பேச்சும்; தனக்குப் பகையானப் பலவகையால் இழித்துத் தன்னைப் பலவகையால் உயர்த்திச் செருக்கிப் பேசும் பேச்சுமே எங்கும் எல்லாரும் பேசக் காண்கின்றோம் . புகை வண்டிகளிலும் இந்தப்பேச்சே, பொதுக்கூட்டங்களிலும் இந்தப் பேச்சே, கோயில்களிலும் இந்தப்பேச்சே, குளக்கரைகளிலும் இந்தப்

பேச்சே.

இதைத் தவிர, நாம் எதற்காகப் பிறந்திருக்கின்றோம்? நாம் இப்பிறவியிற் செய்யவேண்டுவன யாவை? நமக்கும் மற்ற விலங்குகளுக்கும் (மிருகங்களுக்கும்) உள்ள வேற்றுமை என்ன? நம்மையும் மற்ற எண்ணிறந்த உயிர்களையுந் தோற்றுவித்தது யாது? இந்த உலகங்கள் எதற்காகப் படைக்கப் பட்டிருக்கின்றன? வைகளையெல்லாம் படைத்த பேரறிவுப் பொருளின் நோக்கம் யாதாய் இருக்கலாம்? நாம் இறந்தபின் எந்த நிலையை யடைவோம்? பொருள் தேடுவதும், உண்பதும், உறங்குவதும், மருவுவதுந் தவிர, வேறு நாம் செய்யத்தக்கதுந் தகாததும் இல்லையா? என்று இவ்வாறெல்லாம் எண்ணிப் பார்க்கத் தக்கவர்களை நம்மில் நூறாயிரவரில் ஒருவரைக்கூடக் காண்பது அத்தி பூத்தாற் போல் இருக்கின்றதே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/248&oldid=1584503" இலிருந்து மீள்விக்கப்பட்டது