உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

மறைமலையம் 18

அந்நேரத்தில், எல்லை சிறிதும் தெரியாத அப்பெருநீர்ப் பரப்பில், தமக்கு உதவியாய் வந்த துணைவர்களே நம்பிக்கை யற்று மனம் கலங்கித் தம்மைத் துன்புறுத்துவராயின் அப் போது எத்தகைய நெஞ்சழுத்தம் உடையாரும் தம்நெஞ்சம் தடுமாறாதிருத்தல் ஏலுமோ? ஏலாதே; ஆனாலும், கொலம்பசுப் பெரியார் அந்நேரத்திலும் உளம் சிறிதும் தடுமாறிற்றிலர்! தமது கப்பலுக்கருகே கடற்பாசிகள் மிதந்து செல்வதை அவர் உன்னிப்பாய்ப் பார்த்து, "இதோ! நாம் தேடிச் செல்லும் தேயம் அண்மையில் வந்துவிட்டது. அஞ்சாதீர்கள்!” என்று அவர்கள் எல்லார்க்கும் ஆறுதல் மொழிந்தார். அவர் மொழிந்த வண்ணமே சில நாட்களில் அமெரிக்க தேயக்கரை அம்மரக்கலங்களிற் சென்றார் எல்லார் கண்களுக்கும் புலப்படலாயிற்று! அப்பெருநீர்ப் பரவையில் ஆழாது தப்பிய அவரெல்லாம் உவகைக் கடலுள் ஆழ்ந்தனர்! அமெரிக்கக் கரையோரங்களில் உள்ள மலைப் பாறைகளில் ஒட்டி வளர்ந்த கடற்பாசி மிதந்து வருதலைக்கண்டு, அத்தேயத்தின் அருகே தாம் வந்துவிட்டதைக் கொலம்பசுப் பெரியார் அறிந்த அறிவு, அவருடன் சென்ற ஏனைமக்கட்கு இல்லாது போயிற்றே! இதனால் எத்துணைச் சிறிய, எளிய, புல்லிய பொருளையும் புறக்கணித்து விடாமல், அதனையும் அதனதன் தொடர்பையும் உற்றுநோக்கி ஆராயும் அறிவுடையாரே எல்லா வகையிலும் சிறந்தவராவர் என்றறிதல் வேண்டும்.

“அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார் என்னுடைய ரேனும் இலர்.”

(குறள் 430)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/119&oldid=1584733" இலிருந்து மீள்விக்கப்பட்டது