உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13

1. பகலவன் வணக்கம்

பகலவன் என்னும் தமிழ்ச் சொல் சூரியனைக் குறிப்ப தாகும். 'சூரியன்' என்னும் சொல் வடநாட்டில் இருந்த ஆரியர் வழங்கிய வடசொல் ஆகும். இத்தென்னாட்டில் உள்ள தமிழர்கள் பழைய காலத்திலிருந்து பகலவனை ‘ஞாயிறு’, ‘கதிரவன்”, சுடரவன், ‘பரிதி’, ‘என்றூழ்’, ‘கனலி’, ‘எல்லோன்’, 'வெயிலோன்', 'வெய்யோன்' முதலான பல செந்தமிழ்ப் பெயர்களால் வழங்கி வந்திருக்கின்றனர்.

இராக்காலத்தில் தூக்கத்தில் இருந்த நாம், பகலவன் கிழக்கே தோன்றும் விடியற்காலையில் கண்விழித்து எழுந்து, அவனைப் பார்க்கும் போது எவ்வளவு மகிழ்ச்சி அடைந்த வர்களாய் நிற்கின்றோம். கிழக்கே கடல் மட்டத்திற்கு மேல் ஞாயிறு வட்டமாய்ப் பளபள என்று வருகையில் அஃது ஒரு பொன் உருண்டையைப் போல் தோன்றுகின்ற தன்றோ? அப்போது அதனைச் சூழ அதிலிருந்து பாயும் ஒளி பல்லாயிரக் கணக்கான பொற்கம்பிகள் போல் நீண்டு செல்லுதலைப் பாருங்கள்!

இராப்பொழுதில் எங்கும் பரவியிருந்த இருளைத் துரத்திக் கொண்டு கதிரவன் வானத்தின்மேல் எழும்பும் இந்தக் காட்சியை நாம் காண்கையில், அது சிவந்த திருமேனி உடையனாகிய முருகப்பிரான், கறுத்த உருவத்தினை உடைய அரக்கர் கூட்டத்தின் மேல் பல்லாயிரக்கணக்கான தன் அம்புகளை ஏவி அவர்களைத் துரத்திக் கொண்டு வருவது போல் தோன்றுகின்றதன்றோ? மிகுந்த ஒளியுடன் விளங்கும் அச்சுடரவனுக்குக் கீழே பச்சை நிறத்துடன் காணப்படும் கடலானது அம்முருகப்பிரான் ஏறியிருக்கும் பச்சைமயில் போலவும், அக்கடலில் எழுந்து எழுந்து கீழே விழுந்து உலாவும் அலைகளானவை அந்த மயில் இறக்கைகளை விரித்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/46&oldid=1584660" இலிருந்து மீள்விக்கப்பட்டது