உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182

மறைமலையம் 19

மற்று, இந்தி, உருது முதலான வடநாட்டு மொழிகளோ தமிழைப்போற் பழமையானவைகள் அல்ல; மகம் மதிய மதத்தவரான மொகலாய அரசர்கள்வடநாட்டின் மேற் படையெடுத்துப்போந்து, தில்லிப்பட்டினத்தைத் தலைநகராய்க் கைக்கொண்டு, அதன்கண் அரசு வீற்றிருக்கத் துவங்கிய பின்னரே அம்மொழிகள் தோன்றியனவாகும். அக்காலத்தில் தில்லி நகரிலும் அதனைச் சூழ்ந்த இடங்களிலும் பிராகிருதச் சிதைவான ஒரு மொழி வழங்கிக் கொண்டிருந்தது. தில்லியில் துலுக்கரரசு நிலைபெற்றபின், அவர் கொணர்ந்த அராபி மொழி பாரசீக மொழிச் சொற்கள் அம்மொழியின்கண் ஏராளமாய்க் கலக்கப்பெற்று அவரால் அஃது உருது எனவும் பெயர் பெறலாயிற்று.

இதன்பின் நூல் வழக்குடையதாய் இஞ்ஞான்று வழங்கும் இந்தி மொழியானது ‘லல்லுஜிலால்' என்பவரால் உருது மொழியினின்றும் பிரித்துச் சீர்திருத்தம் செய்யப்பட்ட தொன்றாகும். இதற்குமுன் உள்ளதான பிராகிருதச் சிதைவு மொழியிற் கலந்த பாரசிக அராபிச் சொற்களை அறவே யொழித்துச் சமஸ்கிருத மொழிச் சொற்களை மிகுதியாய் எடுத்துச் சேர்த்து அவர் இந்தி மொழியைப் புதிதாய் உண்டாக்கினார். ஆகவே, வடசொற்கலப்பினால் ஆக்கப் பட்டுச் சிறிது காலமாக இப்போது நூல் வழக்கிற் கொணரப் பட்டிருக்கும் இந்தி மொழியை நம் தென்னாட்டவர் கற்றுத் தெரிந்து கொள்வதனால், இவர் வடநாட்டவரெல்லாருடனும் பேசி அளவளாவி விடக்கூடும் என்று சிலர் மடி கட்டி நின்று கூறுவது நம்மனோரை ஏமாற்றும் பொய்யுரையேயாம்.

கி.பி.1400 ஆம் ஆண்டு முதல் 1470ஆம் ஆண்டு வரையில், அஃதாவது இற்றைக்கு 500 ஆண்டுகளுக்கு முன்னிருந்த இராமானந்தர்’ எனப் பெயரிய துறவி இராமனையே முழுமுதற் கடவுளாக வைத்து வழிபடல் வேண்டுமென்ற கொள்கையை வடநாட்டிற் பல இடங்களிலும் பரவச்செய்து வந்தார். இவர் இராமன் மேற் பாடிய பாடல்கள்தாம் முதன் முதல் இந்தி மொழியில் உண்டானவை. அதனால் அவருடைய பாடல்கள் அடங்கிய இந்தி மொழி நூல் ‘ஆதி கிரந்தம்' என வழங்கப்படுகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/215&oldid=1585820" இலிருந்து மீள்விக்கப்பட்டது