உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரைமணிக்கோவை

181

பல

‘கவர்பாவ’, முதலான இன்னும் எத்தனையோ மொழிகளும் வடக்கே பற்பல நாட்டின் கண்ணுள்ள பற்பல மாந்தர்களாலும் பேசப்பட்டு வருகின்றன. இம்மக்கட் பெருங் கூட்டத்துடனெல்லாம், இந்தி மொழியில் ஒன்றை மட்டுந் தெரிந்த தென்னாட்டவர் உரையாடி உரையாடி அளவளாவுதல் கூடுமோ? சிறிதுங் கூடாதே; வடநாட்ட வரிலேயே இந்தி மொழியை அறியாமற் பலதிறப்பட்ட பன்மொழிகளை வழங்கும் மக்கட் கூட்டம் பலவாயிருக்க, இத் தென்னாட்டவர் மட்டும் இந்திமொழியைக் கற்றுப் பேசுதலால் யாது பயன் விளைந்திடக் கூடும்? இவ்வியல்புகளையெல்லாம் நடுநின்று எண்ணிப் பார்க்கவல்ல அறிஞர்க்கு, இத்தென்னாட்டவர்கள் தமக்கு எவ்வகையிலும் பயன்படாததுந் தெரியாததுமான இந்திமொழிகளில் ஒன்றைப்பொதுமொழியென வருந்திக் கற்றலால் வீண்காலக் கழிவும் வீண் உழைப்பும் வீண் செலவும் உண்டாகுமே யல்லாமல் வேறேதொரு நன்மையும் பயனும் உண்டாகாதென்பது நன்கு விளங்கும்.

இற்றைக்கு ஐயாயிர ஆண்டுகளுக்கு முன்னே தொட்டுத் தமிழ்மொழியை நன்கு கற்ற ஆசிரியர்கள் முதுகுருகு, முதுநாரை, களரியாவிரை பெரும்பரிபாடல், தொல் காப்பியம், பெருங்கலித்தொகை, குருகு, வெண்டாளி, வியாழ மாலை, முத்தொள்ளாயிரம், நற்றிணை, நெடுந் தொகை, அகநானூறு. புறநூனூறு, ஐங்குறுநூறு, குறுங் தொகை, சிற்றிசை, பேரிசை, பதிற்றுப்பத்து, எழுபது பரிபாடல் குறுங்கலி, திருக்குறள், சிலப்பதிகாரம், மணி மேகலை, திருவாசகம், திருக்கோவையார், சீவகசிந்தாமணி, திருத் தொண்டர் புராணம், சிவஞானபோதம் முதலான அரும் பெரும் தமிழ் இலக்கண இலக்கிய வீட்டு நூல்களும், அவை தமக்குச் சொற்பொருள் நுட்பமுஞ் சுவையும் மலிந்த சிற்றுரை பேருரைகளும் இயற்றித், தமிழை மாறாத நாகரிக இளமை வளத்தில் இன்றுகாறும் இனிது வழங்கச் செய்துவருதலால், அதனை வழங்குந் தமிழ் மக்களெல்லாரும் ஒருவர் ஒருவர்க்கு நெடுந் தொலைவில் இருப்பினும் அதனாற் பேசியும் எழுதியும் அளவளாவி ஓரிடத்திலுள்ள ரே மக்களினம் போல் உயிர்வாழ்ந்து வருகின்றனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/214&oldid=1585818" இலிருந்து மீள்விக்கப்பட்டது