உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை

177

காட்டும் உண்மைப்பொருள்; "தேம்பா வெழுத்தோலை செவ்வனே நோக்கினாள்" (சீவகசிந்தாமணி, 1040) என்புழியுஞ் செவ்வன் என்பது நேர்மைப்பொருட்டாதல் காண்க.

மலத்தாற் பற்றப்படாமல் யாண்டுந் தூயனாய் விளங்கும் எல்லாம்வல்ல தனித்தலைமைக் கடவுளின் பேரியல்பும், அங்ஙனமின்றி மலத்தாற் பற்றப்பட்டு அத்தலைவற்கு யாண்டும் அடிமையாய்க் கிடந்துவாழ்தற்குரிய புன்முதல் மக்கள் தேவர் ஈறான சிற்றுயிர்களின் சிற்றியல்பும் வேறுவேறாய் நனி விளங்கவும், அவ்வேறுபாட்டினை உள்ளவாறே உணரும் மெய்யறிவு வாயாமல் இறைவனும் உயிர்களும் ஆன அவ்விரு பொருள்களும் எங்கும் ஒன்றுபோற் கலந்து ஒன்றாய்க் காணப் படுதலே பற்றி அவையிரண்டும் ஓரியல்புடைய ஒருபொருளே யாமென்று மயங்க உணர்ந்து, அம் மயக்க உணர்ச்சியினால் மக்கள் ஈறான உயிர்களெல்லாம் உண்மையான் நோக்குங்கால் தமக்குத் தலைவனாய் விளங்கும் இறைவனே யாகும் எனப் படுபொய்யுரை கூறுவார் சிலரை முதலிற் கூறினார். உழிதரல், திரிதல்; பாஞ்சராத்திரர் உடையன் அல்லாதானை உடைய னெனக் கோடலின் அவரும் இவருள்அடங்குவர்.

அருளாயும் அறிவாயும் விளங்கி யாண்டும் நிறைந்துநிற்கும் இறைவன், அவ்வருள் வண்ணங் கெட்டு மருள்வண்ணமாகுஞ் சிறுமையும், அவ்வறிவியல்பு கெட்டு அறிவில்லாததாகும் மடமையும் எய்தி, ஒரு காரணமுமின்றி முறையே உயிரும் உலகமுமாய்த் திரிந்தனன் எனக் கரைவார் சிலரை அதன்பிற் கூறினார்.

அருளாய் அறிவாய் என மாற்றி அருளும் அறிவும், சிறுமையும் மடமையும், உயிரும் உலகமும் என நிரை நிரையாகக் கொண்டுரைத்துக்கொள்க. உலகமென்பது ஈண்டு மண், நீர், தீ, காற்று, வான் என்று கூறப்படும் அறிவற்ற ஐம்பெரு முதற்பொருள்களென்க. வெறுவிது - பயன் இலாதது.

புறத்தே கண்ணுக்குப் புலனாவன வெல்லாங், கருத்தளவாய் ஆராய்ந்துணரப் புகுவார்க்குக் கனவின் றோற்றம்போல் வெறும் பொய்யாகவே முடியுமாகலின், புறத்தே ஓர் உருவாய்க் காணப்படுங் கோயிலென்பதும், அக்கோயிலினுட் காணப்படுஞ் சிவலிங்கமென்பதும் உண்மையில் உள்ளனவல்ல என்பார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/202&oldid=1586946" இலிருந்து மீள்விக்கப்பட்டது