உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை

-

179

எண்ணிறந்த மக்களுள் அடியேனும் ஒருவனாய் ஒழியத் தேவரீர் திருவுளம் பொறாது, வேறு பிரித்து எடுத்து என்னை அவர்களினின்றும் வேறாய்ப் பிரித்தெடுத்து, கூறுபடுமதியின் மறைபுகழ் சைவம் நிறைவுற விரித்துத் தெளிவு ஆர் அளவையின் விளக்கி மலைவுதரும் மாறுபொருது ஓட்டி வீறு உறத் திகழுஞ் சோமசுந்தர குரவனொடு கூட்டி பொருள்களைப் பகுத்தாராயுந் தமது இயற்கையறிவினால் நால் வேதங்களாலும் புகழ்ந்து கூறப்படுகின்ற சிந்தாந்த சைவ சமயத்தை ஒருவகையினுங் குறைபாடின்றி எல்லாவகையினும் பொருந்த விரித்துத் தெளிவு பொருந்திய அளவை யிலக்கணங்களால் நன்குவிளக்கி யாண்டுஞ் சொன்மாரி பொழிந்து உண்மைக்குமாறாய்ப் பேசின பகைவர் களை எதிர்த்து ஓடச்செய்து அம்முகத்தாற் பிறர்க்கில்லாத கல்விச்சிறப்புத் தனக்கு அமைய விளங்குஞ் சோமசுந்தர வாசிரியனொடு சேர்த்து;

நோனாமை மனம் பொறாமை. 'கூறுபடுமதி' யென்பது, பகுத்தறியுங் கூர்த்தமதி. மாறு, ஆகுபெயரால் உண்மைக்கு மாறாயினாரை உணர்த்திற்று.'மாறு' எனப் பகைமைப் பொருடரு சொல் முதல் நிறுத்தினமையின், மற்று அதற்கேற்பப் 'பொருதுஓட்டுந்' தொழில் பின் நிறுத்தப்பட்டன. வீறு 'வேறொன்றற்கில்லா அழகு' என்று பொருளுரைப்பர்

நச்சினார்க்கினியர் (சீவகசிந்தாமணி,489).

மறைத்திரு. சோமசுந்தர நாயகரென்பவர் அடிகட்குச் சைவசித்தாந்த முணர்த்திய குரவராவர்; 'குரவனொடு' என்பதை ஏழன் மயக்கமாகக்கொண்டு 'குரவன்பால் மாணாக்கனாய்ச் சேர்த்து' என்றுரைப்பினும் அமையும்.

-

(119-127) இன்பம் என்பது ஐம்பொறியானும் துன்பமொடு முரணித் துய்ப்பதோ அன்று - இன்பம் எனப்படுவது மெய் வாய் கண் மூக்குச் செவியென்னும் ஐந்துபொறிகளாலுந் துன்பத்தொடு மாறாக நுகரப்படுவதோவெனின் அன்று முகிழ்நகை மாதர் குழுவொடு கெழீஇ இதழ்சுவைத்திருக்குந் திறத்ததோ அன்று - அரும்பனைய சிறுபற்களையுடைய மாதர் கூட்டத்தொடு கூடி அவரது வாயிதழைச்சுவைக்குந் தன்மையதோவெனின் அதுவு மன்று, ஒன்றினும் பற்றாது தன்திறத்து எழூஉம் குன்றல் இல் பொருளோ அன்று -புறத்துப்பொருள்களுள் ஏதொன்றனோடும் பொருந்தாமல் தன்னியல்பிலேயே எழுகின்ற குறைதலில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/204&oldid=1586948" இலிருந்து மீள்விக்கப்பட்டது