உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்த் தலைவர் மறைமலையடிகள் செய்துள்ள தொண்டு, குறிப்பிட்ட ஒரு காலத்திற்கு உரிய தொண்டு அன்று; தமிழின் நிகழ் காலத்திற்கும் எதிர் காலத்திற்குமாக நெடிதுநின்று பயன்தரும் தொண்டு செய்துள்ளார் அடிகள். தமிழ் மெல்ல மெல்ல மணிப்பிரவாள மொழியாக மாற இருந்த தறுவாயில், தன் செம்மையும் சிறப்பும் சிதைவுற நேர்ந்த நெருக்கடியான நிலையில், அதற்கு உறுதுணையாய் முன்னின்று தனித் தமிழியக்கம் தோற்றுவித்து வளர்த்த பெருந்தொண்டு அவர் ஆற்றியது ஆகும். இனித் தமிழ்மொழி தலை நிமிர்ந்து வாழும் என்று நம்பக் கூடிய நிலையில் தமிழை வாழவைத்த பெருமை அவரைச் சார்ந்தது ஆகும். எதிர்கால மொழிவரலாற்றில் இந்த அரிய தொண்டு பொன்போல் போற்றப்படும் என்பதை உணர்ந்தால்தான், அடிகளைப் பிரிந்த பிரிவு ஆற்றொணாத பிரிவு என்பது உணரப்படும். ஆயிரக்கணக்காகப் புத்தம் புதிய, உயரிய நூல்களை வாங்கி எழுத்தெழுத்தாகக் கற்று ஏடு ஏடாகக் காத்து வந்தார் அடிகள். அவர்தம் வாழ்க்கையில் மிளிர்ந்த செம்மை, செழுமை, ஒழுங்கு என்னும் உயரிய பண்புகளை அந்த நூல்களின் ஏடுகள் ஒவ்வொன்றும் நமக்கு இன்றும் அறிவுறுத்தி நிற்கின்றன.

வடமொழியை நன்கு கற்றுத் தமிழ் மொழியின் பெருமையை விளக்கியவர் மறைமலை அடிகள். ஆங்கில அறிவு நூல்களை ஆராய்ந்து தேர்ந்து, பழந்தமிழ்ச் சான்றோரின் புலமைத் திறனைத் தெளியச் செய்தவர் அடிகள். உலக வளர்ச்சியையும் முற்போக்கையும் கூர்ந்து உணர்ந்து தமிழரின் நல்வாழ்விற்கு ஆசி கூறித் தட்டி எழுப்பியவர் அடிகள். அவர்தம் புகழ் ஓங்குக! அவர் தம் தொண்டு விளங்குக!

- டாக்டர் மு. வரதராசனார்

உழை

உயர் உதவு

2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை

தமிழ்மண் தொலைபேசி : 044 24339030

600 017

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/338&oldid=1587445" இலிருந்து மீள்விக்கப்பட்டது