184
மறைமலையம்
―
22
கூறுவதாயிற்று. இங்ஙனம் அவாவை ஒடுக்கி உணர்வற்ற கற்போற் கிடத்தலால் யாது பயன்? ஆறறிவுடைய மக்களினும் இயற்கையிலேயே யறிவின்றிக் கிடக்குங் கல் உயர்ந்ததன்றோ? என்று வினவின், அப் பௌத்தர்கள் ‘எல்லாந் துன்பமாகவே யிருத்தலின், அத் துன்பத்தை நீக்கும்பொருட்டு அவாவை ஒடுக்கி உணர்விழந்து கிடத்தலே நன்று' என்பர்.
உலகத்தின் அமைப்புகளையும், அவற்றை அமைத்தவனது நோக்கத்தையும் அறிந்து அவற்றிற்கு ஏற்ப ஒழுகினால் மக்களுக்குத் துன்பமே வராது. அவற்றிற்கு ஏலாமற் பிழைத்து ஒழுகுவதனாற்றான் துன்பம் உண்டாகின்றது; அத்துன்பம் வந்தவுடனே, தான்செய்த அப்பிழையினால் அத்துன்பம் வந்ததென்றுணர்ந்து, திரும்பவும் அப் பிழைசெய்யாமல் அறிவோடு கூடி ஒழுக இன்பமே வருகின்றது. ஆகவே, துன்பம் ருதலும் அது தனக்கு ஏதுவாகிய அறியாமையை நீக்கி அறிவுமிகுத்து, இன்பத்தை வருவித்தற்கே யாதலால், ‘எங்கும் துன்பமே உளது' என்னும் அப் பௌத்தருரை உலக வழக்கிற்கு ஒவ்வாததாகவே யிருக்கின்றது.
ஒவ்வோர் ஆண்மகனும் ஒவ்வொரு பெண்மகளும்
நாடோறும் தாம் அடையும் இன்ப துன்பங்களைக்
கணக்கிட்டுப் பார்த்தால், துன்பமென்பது குறைவாயும் இன்பமென்பது மிகுதியாயும் இருக்கக் காண்பார்கள். நெற்றித் தண்ணீர் நிலத்தில்விழக் காலைப்பொழுது துவங்கி மாலை வரையிற் பெரும்பாடுபட்டு உழைப்பவர்களுங் கூடத், தாம் செய்யும் தொழிலை மனக்கிளர்ச்சியோடும் அறிவோடும் செய்வார்களானால் தமக்கு அதனால் இன்பமே யுண்டாகக் காண்பர். மிகவருத்தி முடிக்கவேண்டிய தொழில்களும் அறிவு நுட்பத்தால் வருத்தமின்றியே முடிவு பெறுகின்றன. முற்காலத்தில் வலிமை மிக்க ஆடவர்களால் நெடுங்காலம் அரிது முயன்று முடிக்கப்பட்டு வந்த தொழில்களெல்லாம், இப்போது அறிவுநுட்பம் உடையவர்கள் அமைத்து வைத்திருக்கும் நீராவிப் பொறிகள் மின்பொறிகள் முதலிய வற்றால் வருத்தமின்றி விரைவில் முடிக்கப்படுகின்றன. அறியாமை தேய்ந்து அறிவு மிகமிகத் துன்பமும் முறைமுறையே குறைந்து இன்பம் மிகுதலைக் கண்ணெதிரே காண்கின்றனம் அல்லமோ? அறிவுநூல் நுட்பங்களை அமைந்தாராய்தலால்