உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220

3. திருமுகப்பாசுரம் கல்லாடத்திற்

காணப்படுதல்

இனிச் சாக்கிய நாயனார், இடைக்காடர், காரைக்கால் அம்மையார் முதலான அடியார்களை எடுத்தோதியவாறு போல, அப்பர் திருஞானசம்பந்தர் சுந்தரர் முதலியோரை எடுத்தோதாத கல்லாடம் என்னும் அரிய செந்தமிழ் நூல் அம் மூவர்க்கும் முற்பட்ட தாதல் துணியப்படுதலின், அஃது ஆறாம் நூற்றாண்டின் துவக்கத்திலாதல் ஐந்தாம் நூற்றாண்டின் ஈற்றிலாதல் இயற்றப்பட்டதாதல் வேண்டும். 'கல்லாடம்' ஐந்தாம் நூற்றாண்டின்கண் இருந்ததாயின், நச்சினார்க்கினியர் முதலான உரையாசிரியன்மார் தம்முரையுள் அதனை மேற்கோளாக எடுத்துக்காட்டாத தென்னையெனின்; உரையாசிரியன்மார் எல்லாரும் பண்டைச் சங்கத்தமிழ் இலக்கியங்களையும் தொல்காப்பிய இலக்கணத்தையுமே சிறந்த மேற்கோளாய்க் கொண்டவர்கள்; தாம் எழுதும் உரையில் அந் நூல்களிலிருந்தே மேற்கோள் காட்டிச் செல்லுங் கடப்பா டுடையவர்கள்; திருச்சிற்றம்பலக் கோவையார்க்கு உரையெழுதிய பேராசிரியரும், சீவகசிந்தாமணிக்கு உரை யெழுதிய நச்சினார்க்கினியருங்கூடத் தாம் எழுதிய

'தொல்காப்பிய உரை', 'கலித்தொகை யுரை”, ‘பத்துப் பாட்டுரை’களில் திருச்சிற்றம்பலக் கோவையார், சூளாமணி, சீவகசிந்தாமணி முதலிய இடைக்காலத்து நூல்களிலிருந்து அருகி ஓரோ விடத்தன்றி மேற்கோள்கள் மிகவெடுத்துக் காட்டிற்றிலர். திருச்சிற்றம்பலக் கோவையாரில் மேற்கோளாக எடுத்துக் காட்டுதற் கிசைந்த அகப்பொருட்டுறைகள் மலிந்து கிடந்தும், அவற்றைத் தொல்காப்பிய அகத்திணையியல், களவியல், கற்பியல் முதலியவற்றின் உரையில் எடுத்து காட்டாது, பண்டைச் சங்கத்தமிழ் இலக்கியங்களிலிருந்தே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/253&oldid=1587700" இலிருந்து மீள்விக்கப்பட்டது