உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

221

மேற்கோள்கள் எடுத்துக் காட்டும் பேராசிரியர் நச்சினார்க் கினியர் முதலான உரையாசிரியரின் உரை முறையை ஆய்ந்து பார்க்குங்கால் சங்கத்தமிழ் இலக்கியங்கட்குப் பிற்பட்ட காலத்தெழுந்த நூல்களிலிருந்து மேற்கோள் காட்டுதல் அவர்கள் கருத்தன்று என்பது தெற்றென விளங்கும்.

இவ் வுண்மையைக் கருதிப்பாராது உரைகாரர் எவருங் ‘கல்லாடத்’தினின்றும் மேற்கோள் எடாமை ஒன்றேகொண்டு அதனை அவ் வுவரைகாரர்க்குப் பின்னெழுந்த நூலென்று அழிவழக்குப் பேசுவார்க்கு, அங்ஙனமே பதினோராம் நூற்றாண்டின் கண்ணதான பெரிய புராணத்தினின்றும் மேற்கோள் காட்டாமைபற்றி அதனையும் பதின்மூன்றாம் நூற்றாண்டிலிருந்த நச்சினார்க்கினியர்க்குப் பிற்பட்ட தென்று கூறல்வேண்டும்; கம்பராமாயணத்தினின்று மேற்கோள் காட்டாமைகொண்டு அதனையும் அவர்க்குப் பிற்பட்ட தென்றே கூறல்வேண்டும்; வீரசோழியத்தினின்றும் மேற்கோள் எடாமையின் அதனையும் அவர் காலத்திற்குப்பின் வந்ததெனக் கூறல் வேண்டும். மற்று இந் நூல்களெல்லாம் அடியார்க்கு நல்லார், நச்சினார்க்கினியர்க்கு முற்பட்டவை யென்பது காலவாராய்ச்சியில் நன்கு புலனாதலின், அவர் அவற்றை மேற்கோளா யெடாமை ஒன்றையே பற்றிக்கொண்டு அந் நூல்களை அவர் தமக்குப் பிற்பட்டவை என்று உரைத்தல் கூடுமோ? கூடாதன்றே; அதுபோலவே, உரைகாரரால் மேற்கோளாக எடுக்கப்படாமை ஒன்றையே ஏதுவாய்க் கொண்டு, 'கல்லாடம்’ அவர் தமக்குப் பிற்பட்ட காலத்த தென்றல் வழுவுரையா மென்க. அதனை அவ்வாறுரைப்பதற்கு வேறுபல ஏதுக்களும் உளவாயினல்லது. அங்ஙன முரைத்தல் ஒரு சிறிதும் பொருந்தாதென்க.

இனிச், சிவபிரான்மாட்டும் அவனடியார்மாட்டும்

பேரன்பு உடையராகக் காணப்படுங் 'கல்லாட’ நூலாசிரியர் காரைக்காலம்மையார் மூர்த்திநாயனார் முதலியோரைத் தம்மருமைச் செய்யுட்களிற் குறிப்பிட்டவாறுபோலச் சிவபிரான் முழுமுதற்றன்மையை இத்தென்றமிழ் நாடெங்கும் நிறுவித் திகழ்ந்த அப்பர், திருஞானசம்பந்தர், சுந்தரர் முதலாயினாரைத் தம் செய்யுட்களில் எங்குங் குறிப்பிடா மையின்; அவர் மூவர்க்கும் முன்னிருந்தா ரென்பது ஒருதலை. ஈதென்னை!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/254&oldid=1587701" இலிருந்து மீள்விக்கப்பட்டது