உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252

மறைமலையம் 22

ஆறாம் நூற்றாண்டிற்குப்

தமிழிற் கலப்பனவாயின. பின்னெழுந்த அப்பர் சம்பந்தர் தேவாரங்களில் சமயப் பொருள் நுதலும் பாக்களில் நூற்றுக்கு இருபது விழுக்காடு வடசொற்கள் விரவிக் காணப்படுகின்றன; தமிழ்ப் பொருளே நுதலும் பாக்களில் வடசொற்கள் அவ்வளவில்லை. மிகக் குறைந்தே யுள்ளன; தேவாரப் பாட்டுகளை ஒருவாறு முழுதுங் கணக்கிட்டுப் பார்த்தால், நூற்றுக்குப் பத்து அல்லது பன்னிரண்டு விழுக்காடு வடசொற்கள் கலந்துநிற்கக் காணலாம். இவ்வாறு இடைப்பட்ட காலத்தில் தமிழ்நாட்டிற் குடிபுகுந்த புத்தசமண மதங்களோடு, தமிழ்நாட்டிற்கே பெரிதும் உரித்தாகிய சைவசமயமானது எதிர்த்துப் போராடுகின்றுழி, அப் புத்த சமணர் வழங்கிய வடசொற்கள் சொற்றொடர் களாகிய கருவிகளை அது தானும் எடுத்து வழங்கி அப் புறச் சமயங்கள்மேல் திருப்பி ஏவி வெற்றி கண்டது. வெற்றி கண்டபின் அக் கருவிகளைப் புறந்தள்ளாது தன்னிலும் தன் தமிழிலும் அவை இருந்து உயிர்வாழ இடமும் தந்தது. இவ்வாறு இருக்க இடம்பெற்ற வடசொற்களும் வடசொற் றொடர்களும் தாம்பெற்ற இடம் இனிதாயிருக்கக் கண்டு. தம்மினத்தைப் பின்னும் பின்னும் வருவித்துத் தமிழினும் சைவத்தினும் சைவத்தோடு தொடர்புடைய வைணவத்தினும் முதன்மையான இடங்களைக் கவர்ந்துகொண்டு தமிழை இழித்து விடுதற்கும். இயலுமாயின் அதனை இல்லாமலே ஒழித்து விடுதற்கும் முனைந்து நிற்கின்றன.

பத்தாம் நூற்றாண்டிற்குப்பின் இஞ்ஞான்றை வரையில் எழுந்த பற்பல தமிழ் நூல்களில் நூற்றுக்கு முப்பது, நாற்பது, ஐம்பது, அறுபது வரையில் வடசொற்கள் வந்து புகுந்து விட்டமையோடு, வடநூற் கதைகளும ஏராளமாய் நுழைந்து நிலைபெற்று விட்டன. இஞ்ஞான்று சிலர் எழுதும் தமிழ் உரை நூல்களில் நூற்றுக்கு எண்பது தொண்ணூறு விழுக்காடும் வடசொற்கள் மிகுந்து நிற்றலை எளிதிற் காணலாம்.

இங்ஙனமாகத் தமிழ்நூல்களில் வடசொற்கள் புகுந்திருக்கும் அளவினை மிகவும் விழிப்பாயிருந்து கணக்குப் பண்ணிப் பார்த்தால், அவ்வந்நூல்கள் இயற்றப்பட்ட காலத்தைப் பெரும் பாலும் பிழைபடாமல் வரையறுத்துக் காட்டலாம். அது நிற்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/285&oldid=1587732" இலிருந்து மீள்விக்கப்பட்டது