உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் -1 1

27

குறித்துணரமாட்டாது அல்லும் பகலும் அப் பொருளுக்காக ஏக்கற்று நின்று வருந்தும் ஒரு வறிஞன் மற்றையொரு வறிஞனுக்கு அதனை எடுத்துத்தர மாட்டுவனோ? இங் ஙனமே கடவுளைக் காணப்பெறாத ஆசிரியர்களைப் பின்பற்றிச் செல்வாரெல்லாருந் தாம் கருதிய பயனைப் பெறாமல் ஏமாந்து, மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கினவரோடு ஒப்பத் தம் அரும்பெறற் பிறவிப்பயனையும் இழப்பர். "ஒருவன் உலகம் எல்லாம் பெற்றாலுந் தன் உயிரை இழந்து விடுவனாயின் யாது பயன்?” என்று மேனாட்டு ஆசிரியரொருவர் வினாவியாங்குக், கடவுள் அல்லாத மற்றைப் பொருள்களின் உண்மையெல்லாம் ஒருவன் ஓராசிரியர்பால் உசாவித் தெளிந்தானாயினுந், தன் னுயிர்க்குயிராய் நின்று பிறவிகடோறுந் தனக்குப் பெருந் துணையாயிருந்து உதவுங் கடவுளின் உண்மைநிலையைத் தெளிந்திலனாயின், யாது பயன்? பொறுத்தற்கரிய விடாய்கொண்டு தீம்புனல்வேட்டு வருவான் ஒருவனுக்கு, அவன் வேண்டிய அந் நீரினைக் காட்டாமல், நீரின் நலங்களை மட்டும் விரித்து உரைத்துக் கொண்டிருப்பான் ஒருபேதை எதிர்ப் படின், அவன் இவன் சொல்லை ஒரு பொருட்டாகக் கருதிக் கேட்டு நிற்பனோ? நில்லானன்றே; தான் வேண்டிய குளிர்ந்த நீாநிலையைக் காட்டும் ஏனையொருவனை நாடியேயன்றோ செல்வன். அதுவோல், நம்மைப் படைத்த நம் அப்பனைக் காணும் விழைவு மிக்கு அதனை ஆற்றாதே நிற்கும் நாமும், அவனைத் தாம் கண்டு நமக்குங் காட்டவல்ல உண்மை யாசிரியரைச் சார்ந்தன்றோ அப் பெறலரும் பேற்றைப் பெறுதல் வேண்டும்.

அத்தகைய உண்மையாசிரியன்மார் மாணிக்கவாசகரும் அவர்க்குப்பின் திருஞானசம்பந்தர் அப்பர் சுந்தரருமேயாதலை அவர்கள் அருளிச்செய்த திருவாசகந் தேவாரம் என்னும் அருட்செம் பாடல்களால் நன்கறியப் பெறுகின்றோம். கடவுளைக் கண்டவரின் நிலைகளும், அவர் கண்ட காட்சிகளும் அவர்தாமே எடுத்துரைக்க வல்லுநரன்றி, ஏனையோர் வல்லுநர் ஆகார். புதிது விரிந்த ஒரு கொழுந் தாமரை மலரின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/60&oldid=1587506" இலிருந்து மீள்விக்கப்பட்டது