உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

மறைமலையம்

22

நறுமணமும் பெருநலனும் அது தானே நமக்கு விளங்கக் காட்டி நம்மை இன்புறுத்துமல்லால், அவற்றை வாயாற் சொல்வா ரொருவர் அங்ஙனம் அவற்றைக் காட்டி நம்மை இன்புறுத்த மாட்டுவரோ? மேலும் ஓராசிரியரின் நிலைகளை எடுத்துரைக்கப் புகும் மற்றொருவர் அவர்பால் மிகுந்த பற்றுடையராயின், அவரை அளவிறப்பப் புகழ்தலோடமையாது;

அவர்

காணாதவைகளைக் கண்டனவாகவுஞ் செய்யாதவைகளைச் செய்தனவாகவுஞ் சொல்லி உண்மைக்கு மாறான பொய்களைப் புனைந்து கட்டிவிடுவர். அங்ஙனமே ஓராசிரியற்பாற் பகைமை கொண்டாரொருவருந் தம் பகைமையை வெளிக்காட்டாது அகத்தடக்கி அவர்தம் நிலைகளைக் கூறப் புகுவராயின், இவர் அவரைக் குறிப்பாலிகழ்தலோடமையாது, அவரிடத்தில்லாத குற்றங் குறைகளையெல்லாம் ஏற்றிப் பொய்யான பலவற்றையும் புனைந்து கட்டிவிடுவர். இவ்வாறாக, ஆசிரியரின் நிலைகளைக் கூறப் புகும் ஏனையோர் இருதிறத்தினராய் அவர்தம் உண்மை நிலைகளைப் புரட்டிவிடும் பெற்றியினராகவே பெரும்பாலுங் காணப்படுதலால், அவருரைகள் ஏற்கற்பாலன அல்ல. கடவுளைக் காண்டற்குரிய பேறு வாயாதவர்களையெல்லாம் அது வாய்த்தவர்களாகக் கட்டிவிட்டுப் பிறர் சொல்லிய கதைகட்கோர் அளவேயில்லை. ஆதலால், அத் தன்மையவாம் பொய்க்கதைகளுட் சேர்ந்தனவாகாமற், சைவசமய ஆசிரியன் மார் கடவுளை நேரே கண்டு தாம் எய்திய பேரின்ப நிலைகளும், தாம் பெற்ற அப் பேரின்ப நிலைகளை இவ் வையகமெல்லாம் பெறல் வேண்டுமெனக் கருதி அவர் செய்த செயற்கருஞ் செயல் களும் அவரருளிச் செய்த திருவாசக தேவாரச் செந்தமிழ் மாமறைகளிலிருந்தே நன்கு புலனாகிக் கமழ்தலால், அவர்தம் வரலாறுகளை ஆய்ந்துணரும் உணர்ச்சியொன்றே பிறவிக்கடலிற் கிடந்துழலும் நம்மனோரைப் பேரின்பக் கரையில் ஏற்றவல்லதா மென்பதை யாவருங் கடைப்பிடித்தல் வேண்டும்.

இனிச், சைவசமயாசிரியன்மார் நால்வருள்ளுந் திருஞான சம்பந்தப் பெருமான் மூன்றாண்டுச் சிறுகுழந்தையாயிருந்த போதே அம்மையப்பராம் இறைவன்றன் அருளுருவினை நேரே கண்டு, அருட்பால் ஊட்டப் பெற்றுப், பதினாறாயிரஞ் செந்தமிழ்த் தெய்வப்பாடல்களைப் பொழிந்து, கடவுள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/61&oldid=1587507" இலிருந்து மீள்விக்கப்பட்டது