உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158

மறைமலையம் - 23

பிற்றைஞான்றை வைணவ சமயத்தாரால் திருமாலின் விழுமிய பிறப்பினராய்க் கொள்ளப்பட்டுப் பெரிது வணங்கப்படுங் கண்ணனும் இராமனும் அப்பாடல் களுட் சிறிதுங் குறிப்பிடப்படாமையை ஆராயுங்கால், அவ் விருவரைப் பற்றிய கதைகள் இத் தென்றமிழ்நாட்டிற் பரவுதற்கு முன்னரே திருமால் பிறப்பு இறப்பு இல்லா முதல்வராகப் பண்டைத் தமிழ்ச் சான்றோராற் பரவப்பட்டு வந்தமை புலனாம். வடக்கிருந்துவந்த ஆரியப்பார்ப்பனர் தாங்கொணர்ந்த மாபாரத’ ‘இராமாயணக் கதைகளால் கண்ணன் இராமன் என்னும் இருவரையுந் தெய்வங்களாக்கி அவரைத் திருமாலோடு ஒன்றுபடுத்திய பின்னரே தான், அக் கண்ணன் இராமன் என்பார்க்குரிய பிறப்பு இறப்புக்கள் திருமாலுக்கும் உரியனவாக ஏற்றப்பட்டன. அதற்கு முன்னெல்லாம் தமிழ்ச்சான்றோர்கள் சிவபிரானையுந் திருமாலையும் ஒன்றாகவே வைத்து வழிபட்டு வந்தார்கள்; சைவம்’ ‘வைணவம்' என்ற இருவகைச் சமயப் பகுப்பு அக்காலத்தில் இத் தமிழ்நாட்டின்கண் இருந்ததே இல்லை; கி.பி.இரண்டாம் நூற்றாண்டிற்கு முற்பட்ட பழைய செந்தமிழ்ப் பாட்டுக்களில் எங்குஞ் 'சைவம்' 'வைணவம்' என்னுஞ்சொற்கள் சிறிதுங் காணப்படா.வடக்கிருந்துவந்த ஆரியப்பார்ப்பனர், தமிழ் நன்மக்களுள் இருந்த ஒற்றுமையைக் குலைத்து, அவர் தம்மை வேறுபிரித்து, அவர் தமக்கெல்லாந் தாமே மேலாக நிற்றல் வேண்டியே, திருமாலை யுயர்த்திப் புராண கதைகளைப் படைத்து 'வைணவம்' என்னும் ஒரு மதத்தையும் தனியே யுண்டாக்கினர். மற்றை மக்களைப்போலவே பிறந்து பலவகைத் துன்பங்களில் உழன்று இறந்துபட்ட கண்ணன் இராமன் முதலாயினாரைத் 'திருமாலின் அவதாரங்கள்' எனப் புகன்று, அவர்களை அத் திருமாலினும் மிக்கவராக வைத்து வழிபடும் ஆரியரது புன்செயலைக் கண்டவளவானே, எல்லாம்வல்ல முழுமுதற் கடவுளைப் பிறப்பு இறப்புக்களிற் கிடந்து உழலும் மக்களுக்கு ஒப்பாகவைத்துச் சொல்லுதலிற் சிறிதுங் கருத்து உடன்படுதல் இல்லாத தமிழ்ச்சான்றோர்கள் தமது மேம்படுகொள்கை, புதிது தோன்றிய 'வைணவ’ மதத்தின் முற்றும் வேறாதலைப் பொள்ளெனப் புலப்படுத்தல் வேண்டியே தாம் முழுமுதற் கடவுளுக்குப் பெயராய் இட்டு வழங்கிய 'சிவம்' என்னும் பெயராற் 'சைவம்' என்னும் ஒரு குறியீட்டையுண்டாக்கி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/167&oldid=1588599" இலிருந்து மீள்விக்கப்பட்டது