உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230

மறைமலையம் - 23

19

வாழ்வார் விஷ்ணு பாதத்தி லிருந்து கங்கை கீழ் இழிந்தாள் எனக் கதைகட்டிச் சொல்லுதற்குத்தான் யாங்ஙனம் இடம்பெற்றார் எனின்; இருக்கு வேதகாலத்தில் 'விஷ்ணு' என்னுஞ்சொல் பகலவனுக்கே ஒரு பெயராக வழங்கிற்று; பகலவன் செல்லும்வழி வான்வெளியே யாகலின், அவ் வான்வெளி 'விஷ்ணுபாதம்' எனப் பெயர்பெறுவதாயிற்று ; 'பதம்’ ‘பாதம்’ என்னும் வடசொற்கள் ‘அடி’ அல்லது‘அடிச்சுவடு' தோய்ந்த இடம் எனப் பொருள்தரும். நிலத்தின்கண் உள்ள நீர் ஆவியாக மாறி மேல் எழுந்து வானத்தின்கண் வைகுதலாற் கங்கை வானுலகத்தின்கண் உளள் என ஆன்றோர் உருவகப்படுத்திக் கூறினர். வான்வெளி ‘விஷ்ணுபாதம்' எனவும், வானத்தினின்று மழையாக இறங்கும் நீர் கங்கை எனவும்,பெயர் பெற்றமையால், இயற்கையில் நிகழும் இந்நிகழ்ச்சியைக் கொண்டு 'விஷ்ணுவின் அடியிலிருந்து கங்கை கீழ் இழிந்தாள்' எனக் கதைகட்டி அம்முகத்தால் அக் கங்கை நீரைச் சடையில் ஏற்ற சிவபிரானை அவ்வாழ்வார் பழித் துரைத்து மகிழ்ந்தார். இங்ஙனமே பகலவன் காலைப்பொழுதில் வான்வெளியின் ஒருகூற்றையும், நண்பகற்பொழுதில் அதன் நடுக்கூற்றையும், மாலைப்பொழுதில் அதன் மற்றொரு கூற்றையுங் கடந்து செல்லுதலாகிய இயற்கை நிகழ்ச்சியையே 'விஷ்ணு மூவடியால் உலகினை அளந்ததாக” உருவகப்படுத்தி முன்னோர் கூறினர். இவ்விஷ்ணு வென்னுஞ்சொல் பகலவனை உணர்த்துதல் அறியாத வைணவர்,அவனை ஒரு தனித்தெய்வமாகக் கொண்டு, அவன் மாவலிபாற் குறள்வடிவிற் சென்று மூவடிமண் இரந்து மூவுலகினையும் அளந்தான் என மற்றொரு கதையுங் கட்டி விட்டனர். இவ்வாறே ஆராய்ச்சியறிவு வாயாத வைணவரும் சைவருங் கட்டிவிட்ட கதைகள் அளப்பில; என்றாலும், இத்தகைய கதைகளை எல்லையின்றிப் படைத்து முழுமுதற் கடவுளை வழிபடவொட்டாமல் நம் போன்ற மக்களையே தெய்வமாக வழிபடுமாறு வைணவர்கள் செய்தாற்போலச், சைவர்கள் செய்திடாமை நமதுள்ளத்திற்கு ஓர் ஆறுதலைத் தருகின்றது.சைவர்கள் எத்தனை கதைகளைப் படைத்தனராயினும், பிறப்பு இறப்பு இல்லா ஒரு முழுமுதற் பொருளாகிய சிவத்தை வழிபடுதலினின்றும் அவர் சிறிதும் பிறழ்ந் திலாமையே பெரிதும் பாராட்டற்பால தொன்றாம். அதுகிடக்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/239&oldid=1588694" இலிருந்து மீள்விக்கப்பட்டது