உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212

  • மறைமலையம் - 25

நிகழ்தலின் ஒன்று அஃது எங்கும் நிறைந்த பொருளாதல் வேண்டும் அல்லதது வரம்புடைப் பொருளாய் ஒரே காலத்திற் பலவிடங்களிற் றோற்றுவித்தற்கு இசைந்ததாகல் வேண்டும்; மற்று அஃது எங்குமுள்ள பொருளென்பது எவர்க்கும் உடம்பாடன்மையின், அது பலராற் பலவிடங்களிற் றோற்று விக்கப்படும் வரம்புடைப் பொருளென்றே முடிக்கப்படும். அதனால், ஒரு சொல் பலராற் பலவிடங்களிற் றோற்று விக்கப்படும் பல பொருளே யல்லாமல் ஒரு பொருளாக மாட்டாது.

அல்லதூஉம், 'அல் திணை என்னுஞ் சொற்கள் புணர்ச்சிக்கண் அஃறிணை எனத் திரிபுறுகின்றன; இங்ஙனந் திரிதல் என்றுமுள்ள பொருள்கட்கு ஏலாமையும் கருதற்பாற்று; மேலும், ஒரு விளக்கி னொளிபடினும், அன்றி அன்றி நூறு விளக்கினொளி படினும் தான் ஒரு படித்தாயே விளங்கும் ஒரு குடம்போலாது, ஒரு சொற் பலராற் சொல்லப்பட்டவிடத்துத் தன் ஓசை முன்னை அளவிற் பெருகுதலானும் சொற்கள் திரிபுறுந் தன்மைய வென்பதுபெறப்படும். ஆதலாற், சொற்கள் என்றுமுள பொருள் என்றல் யாங்ஙனமென வினாவுவார்க்கு மீமாஞ்சகர் விடுக்குமாறு: சொற்கள் ஓர் ஆண்மகன் முயற்சியாற் றோன்றி ஒருநொடிப் பொழுதில் அழியுமென்றுரைத்தல் பொருந்தாது, என்னை? அம்முயற்சிக்கு முன்னுள்ள சொற்களையே அவ்வாண்மகனது முயற்சி அந்நேரத்திற் றோற்றுவிக்கின்ற தாகலின் சொல்லும் முயற்சிக்கு முன்னும் பின்னும் சொற்கள் உளவாதல் கண்டிலமாலெனின், சொல்லும் முயற்சி இடையறவு படாத முன்னும் பின்னும் தொடர்புற்று நிகழுமாயிற் சொற்களுந் தொடர்புறத் தோன்றிய படியாய் நிற்கும். அவ்வாறின்றி முயற்சி இடைவிட்டுப் போதலின் அவை முன்னும் பின்னும் உண்மை புலப்பட்டிலது; ஆதலாற்சொற்கள் சொன்னிகழ்ச்சிக்கு முன்னும் பின்னும் இல்லையென்றல் அடாது. இன்னும், சொற்களெல்லாங் குடம்போல் ஆக்கப்படு பொருளென்றலும் அமையாது; என்னை? ஒருகுடம் ஆக்கப் பட்ட வழி அஃது அந்நேரந் தொட்டுப் பிற்பொழுதெல்லாந் தொடர்புற நிற்றலைத் தெளியக் காண்டும். மற்றுச் சொற்களும் அதுபோல் ஒருகால் ஆக்கப்பட்ட வழிப் பின்னர் நெடும் பொழுது தொடர்பாய் நிற்கக் காணாமையினென்பது. ஆதலாற்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/245&oldid=1589479" இலிருந்து மீள்விக்கப்பட்டது