உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசக விரிவுரை

257

(தொல்காப்பியம்

பற்றிவரும்" என்று சேனாவரையர் சொல்லதிகாரம் 202) கூறிய உரையாற் காண்க.

இனி, அவ்வச் சமயவழி நின்று ஒழுகி இறைவனைத் தாந்தாம் அறிந்தவாறு வழுத்தி அன்பராய் இருக்குநரை எல்லா இரக்கமுமுடைய இறைவன் வெறுப்பின்றி நோக்கி அவரைப் பற்றிக் கொண்டு அருள்புரிய மிடத்தும், தன்னைப் பெண்ணுரு வாய்க் கருதி வழிபட்டார்க்கு அதற்கு மாறான ஆணுருவிற் றோன்றியும், ஆண் பெண் என்னும் இரு திறமுங் கலந்த வுருவில் வழிபட்டார்க்கு அவ்விரண்டுமல்லா அலியுருவிற் றோன்றியும், ஆணுருவாய்க் கொண்டு வழிபட்டார்க்கு அதற்கு மாறான பெண்ணுருவிற் றோன்றியும் அவ்வவர் அறிவின் சிற்றள னையும் அதற்கு அகப்படாத தன்னியல்பின் பேரளவினையுந் தெரித்தருளுவான் என்பதுணர்த்துவார் 'முனிவற நோக்கி நனிவரக் கௌவி, ஆணெனத் தோன்றி அலியெனப் பெயர்ந்து, வாணுதற் பெண்ணென வொளித்தும்' என்றருளிச் செய்தார். எல்லையறியப் படாத முதல்வ னியல்பை முற்று முணர்ந்தார் போல் இறுமாந்து வழிபடுவாரையும் வெறாது தனது பேரிரக்கத்தால் அவரை ஆண்டுகொள்ளு மிடத்தும், இறைவன் அவரது அறிவின் பொய்ம்மை தேற்றியே அவர்க்கு அருள் புரிவா னென்பது இதனாற் கூறியபடியாம்.மக்கள் தாந்தாம் வல்லவாறும் கூறும் ஆண் பெண் அலி யென்னும் இயல்புகட் கெல்லாம் மேலாய் நிற்பனென்பது பற்றியே எல்லாம் ஓதாதுணர்ந்த திருஞான சம்பந்தப் பெருமான்.

“வெந்த சாம்பல் விரையெனப் பூசியே தந்தை யாரொடு தாயிலர் தம்மையே சிந்தி யாஎழு வார்வினை தீர்ப்பரால்

எந்தை யார்அவர் எவ்வகை யார்கொலோ” எனவும்.

“ஆட்பா லவர்க்கருளும் வண்ணமும் ஆதி மாண்பும் கேட்பான் புகில்அள வில்லை கிளக்க வேண்டா கோட்பா லனவும் வினையுங் குறுகாமை எந்தை தாட்பால் வணங்கித் தலைநின்றிவை கேட்க தக்கார்”

எனவும் அருளிச் செய்ததூஉமென்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/290&oldid=1589532" இலிருந்து மீள்விக்கப்பட்டது