உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256

மறைமலையம் 25

நின்றும் வெந்துயர்க் கோடையில் தீயிடை நின்றும் தாம் கடுந்தவம் புரிதலைக் கண்டு தம்மாட்டு அன்புடைய உறவினராவா ரெல்லாம் வருந்தாநிற்பவும் அவரைப் பாராது தமது தவ முயற்சியிலேயே உறைத்து நிற்பவர்க்கும் இறைவன் தன்னை ஒளிக்குமாறு கூறியபடியாம். ஒற்றுமையாவது பிறர்க்கு வரும் இன்ப துன்பங்களைத் தமவாகக் காணுதற்கு ஏதுவாம் அன்பால் வரும் ஒருமைப்பாடு.

‘உறைப்பவர்’- தாமெடுத்த முயற்சியில் கருத்து மிகுதியும் ஈடுபட்டு நிற்பவர்.

நான்மறைகளின் பொருட் கூறுபாடுகளை எத்துணை காலம் வருந்தி ஆராயினும் அவற்றின்கண் ஒரு முழுமுதற் வுளின் இயல்பு ஒரு சிறிதும் விளங்காமையின் ‘மறைத்திறம் நோக்கி வருத்தினர்க் கொளித்தும்' என்றருளிச் செய்தார். வேதங்களிற் காணப்படும் வழுத்துரைகளெல்லாம் இந்திரன் வருணன் சூரியன் அசுவினி மருத்துக்கள் முதலான இயற்கைப் பொருட்டெய்வங்கண் மேலவாய் இருப்பக் காண்டுமன்றி, ஒரே முதல்வன் இயல்பை அறிவுறுத்தாமை அவற்றைப் பொரு டெரிந்து ஓதுவார் எவரும் அறிவர்.

இனி, வேதங்களானே யன்றி வைரவம் வாம் காளாமுகம் மாவிரதம் பாசுபதம் சைவம் முதலான அகச்சமயங்கள் ஆறுக்கும் உரிய தந்திரங்களானும், பாஞ்சராத்திரம் பாட்டா சாரியம் மீமாஞ்சை சமணம் புத்தம் உலகாயதம் முதலான புறச்சமயங்கள் ஆறுக்கும் உரிய தந்திரங்களானும் ஒப்பற்ற ஒரு முழுமுதற் கடவுளை யறிதல் செல்லாமையின் ‘இத் தந்திரத்திற் காண்டுமென் றிருந்தோர்க்கத் தந்திரத்தின் அவ்வயின் ஒளித்தும்' என்றருளிச் செய்தார்.

‘தந்திரம்’ நூல் எனப் பொருடருவதொரு வடசொல். இறைவனியல்பு வேதங்களான் அறியப்படாமை கூறிய அடிகள், அவ்வேதங்களின் வேறாய் அவ்வச் சமயத்தாராற் செய்யப்பட்ட நூல்களாகிய தந்திரங்களானும் அவனியல்பு அறியப்படாமை கூறுதலே பொருத்தமாகலின், இச்சொல்லுக்கு ‘உபாயம்' எனப் பொருள் கூறினார் உரை பொருந்தாமை கண்டு கொள்க.

'காண்டும்' என்னும் உளப்பாட்டுத் தன்மை வினைமுற்று எதிர் காலங் காட்டுதல் “உம்மொடு வரூஉங் கடதற எதிர் காலம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/289&oldid=1589530" இலிருந்து மீள்விக்கப்பட்டது