உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/376

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசக விரிவுரை

343

‘அமரர்’ சாவில்லாதவர் எனப் பொருள்படும் ‘அமர:' என்னும் வடசொற் றிரிபு.

'பாரிடை யைந்தாய்ப் பரந்தாய்' என்பது மண்ணின்கட் காணப்படும் சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்னும் ஐந்து தன்மைகளிலும் இறைவன் கலந்துநிற்குமா றுணர்த்தியது. முதற்பொருண் மாயையிலிருந்து இறைவன் நிலத்தைத் தோற்றுவித்த பின்னரன்றி இஃது அவ்வியல்புகள் உடையதாதல் புலப்படாமையானும், எல்லாவற்றின் உள்ளும் புறம்புமாய் நிற்கும் முதல்வன் இந்நிலத்தினும் அதனியல்புகளினுங் கலந்து நிற்பனாகலானும் இவ்வாறு கூறினார். இஃது ஏனைப் புனல் அனல் கால்வெளி முதலியவற்றிற்கும் ஒக்கும். இனி, மண்ணிற்கு நாற்றம் ஒன்றுமே இயற்கைத் தன்மை; ஏனைச் சுவை ஒளி ஊறு ஓசை என்னும் நான்கியல்புகளும் ஏனை நாற்பொருள்களுந் தன்னோ டுடன் கலந்திருத்தலாற் போந்த செயற்கைத் தன்மைகளாகும்.

'நீரிடை நான்கு' என்பன நீருக்கு இயற்கைத் தன்மையான சுவையும், ஏனை அனல் கால் வெளி என்பவற்றின் சேர்க்கையாற் பிறந்த ஒளி ஊறு ஓசை என்னும் மூன்று செயற்கைத் தன்மை களுமாம்.

-

நிகழ்த்தல் விளங்குதல். இச்சொல் இப்பொருட்டாதலை “வளன்அற நிகழ்ந்து வாழுநர்” என்னும் பதிற்றுப்பத்து அடி யுரையிற் (பதிற்றுப்பத்து 49) காண்க.

‘தீயிடை மூன்று' என்பன: அனலுக்கு இயற்கைத் தன்மை யான ஒளியும், ஏனை வளி வெளி என்பவற்றின் சேர்க்கையாற் றோன்றிய செயற்கைத் தனமையான ஊறும் ஓசையுமாம்.

-

திகழ்தல் மிக்குநிற்றல். மிக்குநிற்றல். இப்பொருட்டாதல் “அங்கண் விசும்பின் அணிதிகழும்” என்பதன் உரையிற்* (புறப்பொருள் வெண்பா மாலை 622) காண்க.

‘வளி யிடை யிரண்' டாவன : காற்றின் இயற்கைத் தன்மை யான ஊறும், ஏனை விசும்பின் கூட்டுறவாற் பிறந்த செயற்கைத் தன்மையான ஓசையுமாம்.

'வெளி யிடை ஒன்று' என்பது விசும்பின் இயற்கைத் தன்மையான ஓசை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/376&oldid=1589860" இலிருந்து மீள்விக்கப்பட்டது