உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7

1. பதி

இவற்றுட் பதி யென்பது இறைமுதற்பொருள் ஒன்றே யாம்; இது தன்வயத்தனாதல், தூயவுடம்பினனாதல், இயற்கை யறிவினனாதல், முற்றுமுணர்தல், இயல்பாகவே பாசங் களின் நீங்குதல், பேரருளுடைமை, வரம்பலின்ப முடைமை, முடிவி லாற்றலுடைமை என்னும் எண்பெருங் குணங்களுடைய தாகும். இனி, யிவற்றுள், “தன்வயத்தனாதல் என்பது தான் ஒன்றன் வயப்பட்டு நடவாமல் எல்லாந் தன் ஆணைவழி நின்று ஏவல் கேட்ப அதிகாரம் நடாத்துஞ் சுதந்திர முழு முதன்மை யுடைமை." உலகத்தின்கட் சுதந்திர முடையார் அஃதில்லா தாரைத் தம் ஏவல் வழிவைத்து நடத்தக் காண் கின்றேம். தமக்கு அறிவு இன்மையானும் ஆற்றல் போதாமை யானுந் தாமே ஒரு கரும முடிக்க மாட்டாதார், அது முடித்தற் குரிய அறிவும் ஆற்றலுமுடைய பெரியாரைச் சார்ந்தொழுகி அவர் துணையால் அது முடித்துக்கொள்ளுவர். இதனால், தமக்கு ஒரு மாட்டாமை யுள்ள விடத்தே வல்லாரைச் சார்ந்து அவர் சொல்வழி நிற்றலும், அஃதில்லா விடத்துத் அஃதுடையாரைத் தஞ்சொல்வழி நிறுத்து ஏவலிடுதலும் நன்கறியப்படுதலின், எத்தகைய குறைபாடும் இல்லாத இறை முதற்பொருள் பிறிதொன்றனைச் சார்ந்து நிற்றல் எல்லா வாற்றானுமின்மை பற்றி அதற்குத் தன்வயத்தனாதல் என்னுங் குணம் உண்மை பெற்றாம்.

தாம்

இனித் தூயவுடம்பினனாதல் என்பது “கூன் குருடு முதலான எண்வகை எச்சங்களும், என்பு தோல் நரம்பு முதலான எ ழுவகைத் தாதுக்களாற் சமைக்கப்படுதலும், அழுக்குத்திரளல் சீழ்வழிதல் புழுநெளிதல் பவ்வீ நீர் ஒழுகல் நோயான் வருந்துதல் புண்படுதல், இறத்தல், பிறத்தல் முதலான குற்றங்களும் பிறவுமுடைய புள்முதற் றேவரீறாக வுள்ள உயிர்த்தொகுதிகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/32&oldid=1591361" இலிருந்து மீள்விக்கப்பட்டது