உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 29.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222

-

மறைமலையம் -29

இனி, மருதநிலம் அல்லாத முல்லை, குறிஞ்சி, முதலான நிலப்பகுதிகளிலும் மேலோருங் கீழோருஞ் சிறுபான்மை உளரென்பது,

“ஆயர் வேட்டுவர் ஆடுஉத் திணைப்பெயர்

ஆவயின் வரூஉங் கிழவரும் உளரே”

என ஆசிரியன் கூறுமாறுபற்றி உணர்ந்துகொள்க. எனவே, தமிழ்நாட்டின்கட் பிறந்த மக்கள் வகுப்பு முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என்னும் நால்வகை நிலம்பற்றி எழுந்த தொன்றாதல் நன்கு பெறப்படும். இந் நால்வகை நிலத்தும் மேலோரான நன்மக்கள் தம்முள் ஏதும் வேறுபாடின்றி உண்ணல் கலத்தல்களைச் செய்து வந்தமை 'தொல்காப்பியம்' இறையனாரகப் பொருள்’ ‘திருச்சிற்றம்பலக்கோவையார்’ முதலான தெய்வத் தமிழ்மறை நூல்களால் நன்கறியப்படும்; அவையெல்லாம் ஈண்டுரைக்கப் புகின் மிகவிரியுமாதலின் அவை தம்மை அந்நூல்களுட் கண்டு கொள்க.

இங்ஙனம் நால்வகை நிலத்தும் அவ்வந் நிலத்து மக்களின் தொழில் வேறுபாடு பற்றிப் பல்வகுப்பினராகப் பிரிக்கப் பட்டோருட், கொலையும் புலாலுணவும் மறுத்து ஓதல் வேட்டல் அரசுபுரிதல் வாணிகஞ் செய்தல் உழவு நடாத்தல் என்னும் உயர்ந்த தொழிற்கண் நிலைபெற்று நின்றோர் ‘மேலோர்' எனவும், அவர்தம் ஏவல்வழி நின்று அக்கொலையும் புலையும் நீக்காமற் பெரும்பாலுங் கைத்தொழில் செய்யும் அவ் வளவில் நின்ற ஏனை வகுப்பினர் 'கீழோர்' எனவும் இருபெரும் பிரிவில் வகுக்கப்பட்டு, அவரவரும் அறிவாலும் ஒழுக்கத் தாலும் தொழிலாலுந் தத்தமக்குள்ள உயர்வு தாழ்வுகளை நினைந்து, கீழோர் மேலார்க்கு அடங்கி நடக்கவும், மேலோர் தங்கீழ்வாழும் குடிமக்களை இனிது பாதுகாத்து வரவும் இவ்வாறு மிகவும் அமைதியாகவும் ஒழுங்காகவும் பண்டைத் தமிழ் மக்கள் வாழ்க்கை இனிது நடைபெறலாயிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/247&oldid=1591928" இலிருந்து மீள்விக்கப்பட்டது