உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 29.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாதி வேற்றுமையும் போலிச்சைவரும்

71

புகுந்தால், இவ்வேடு இடங்கொள்ளாது. இம்மாறுதல்களில் நல்லனவும் உண்டு, தீயனவும் உண்டு, இவையெல்லாம் பழையகாலத்தில் இருந்தவைகள் அல்ல; புதிது வந்தவைகளே.

இவ்வாறு மக்களுடைய நாகரிக வளர்ச்சிக்கும் அறிவின் மேன்மைக்கும் ஏற்பக் காலந்தோறும் பழைய ஏற்பாடுகள் அழிந்து போதலும் புதிய ஏற்பாடுகள் புகுந்து பொருந்து தலும் இயற்கையாம். இது பற்றியன்றோ "பழையன கழிதலும் புதியன புகுதலும், வழுவலகால வகையினானே” என்னும் ஆன்றோர் மொழியும் எழுந்தது.

ஆகவே, சாதி வேற்றுமை பழையகாலந்தொட்டு இருத்தல் பற்றியே அதனை விடாது கைப்பற்றி யொழுகல் வேண்டு மென்பது சிறிதும் பொருத்தமில்லாத போலி யுரையாம்.

இனிச் சாதி வேற்றுமை பழமைதொட்டே உள்ள தென்பதும் ஆராய்ச்சி அறிவில்லார் கூற்றாம். மிகப் பழைய நூலாகிய இருக்கும் வேதத்தின் முதல் ஒன்பது மண்டிங் களினும் சாதி வேற்றுமையைப் பற்றிய குறிப்பு ஒன்றுமே காணப்படவில்லை. இருக்குவேதம் முதல் ஒன்பது மண்டிலங்களினும் 'பிராமணன்' என்னுஞ் சொல் 'வேள்வி வேட்கும் முனிவனை'யும், 'பதிகங்கள் பாடும் புலவனை’யுங் குறிக்கின்றதே யல்லாமற், பிற்காலத்தில் வழக்கும் பார்ப்பன வகுப்பினனைக் குறிக்கவில்லை. ஏனை மூன்று வகுப்பினரின் பெயர்களான க்ஷத்திரியன், வைசியன், சூத்திரன் என்னும் சொற்களுங்கூட அவ்வொன்பது மண்டிலங்களினுங் காணப் படவில்லை. இதனால், அவ்வொன்பது மண்டிலங்களும் எழுதப்பட்ட காலங்களில் மக்கள் எல்லாரும் ஒரே வகுப்பின ராயிருந்தனரே யல்லாமல், நால்வேறு வகுப்பினராய்ப் பிரிந்திலரென்பது புலனாகின்றதன்றோ? மக்கள் முதன் முதல் மலைகளிலுங் கடலோரங்களிலும் உயிர்வாழ்ந்தன ரென்றும், அக்காலங்களில் அவர்கட்கு வீடுகள் இல்லை யென்றும், அத்தகைய கிருத ஊழியிற் சாதிவேற்றுமை சிறிதுமே இல்லை யென்றும் வாயு புராணமும் (8, 53, 62) புகலா நிற்கின்றது. எனவே, இறைவனாற் படைக்கப்பட்ட பண்டைக்காலத்தே மக்களுள் ஏதொரு வேற்றுமையும், உயர்வு தாழ்வுகாட்டும் ஏதொருபிரிவும் இருந்ததில்லை யென்பதும் புலனாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/96&oldid=1591760" இலிருந்து மீள்விக்கப்பட்டது