உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 3.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ மரணத்தின்பின் மனிதர்நிலை ❖
79

இனித் தான் இவ்வுலகில் உயிர்வாழ்வதிற் பயனில்லையென்று கண்டாள். தன் உயிரை இன்றைக்கே மாய்த்து விடுதல்தான் தக்கதென்று தீர்மானித்தாள். நள்ளிரவில் எல்லாரும் அயர்ந்துறங்கும் போது அவள் மெல்ல மெல்ல நகர்ந்து வீட்டின் புழக்கடைப் பக்கத்திலிருந்த கிணற்றண்டை போய் எழுந்து நின்று ‘யான் இறந்துபோன பிறகு ஆவேசமாய் நின்று என் மாமியையும் நாத்துணாளையும் மிகவும் துன்புறுத்தி அவர்கள் உயிரைக் கொள்ளைகொள்ளக் கடவேன்,” என்று உறுதி செய்துகொண்டு கிணற்றிற் குதித்து மாண்டாள். அவள் விழுந்ததனால் உண்டான ஓசை வீட்டிலிருந்தவர்கள் யார்க்குங் கேட்கவில்லை. வீடு மிக அகன்ற தொன்றாயிருந்தமையினாலும் எல்லாரும் அயர்ந்து உறங்கினமையினாலும் அவ்வோசை கேட்டிலதுபோலும். விடியற் காலையிலெழுந்தவர்கள் கிணற்றில் பார்க்க அப்பெண் பிணமாய்க் கிடத்தலைக் கண்டு திடுக்கிட்டு ஓலமிட்டார்கள். அப்பெண்ணின் கணவன், மாமனார் முதலிய எல்லாரும் வந்து பார்த்தும்... பிணத்தை மேலெடுத்து முதனாளும் அதற்கு மேற்பட்ட நாட்களிலும் மாமி நாத்துணாளால் அப்பெண் குரூரமாய் நடத்தப்பட்ட விவரமெல்லாம் கேட்டறிந்தார்கள்.

இவ்வாறு அப்பெண் இறந்து பத்துப் பதினைந்து நாட்கள் ஆயின. அவள் மாமியும் நாத்துணாளும் வெளிக்கு விசனம் உடையவர்கள்போற் காட்டினாலும், அவள் இறந் தொழிந்தமைபற்றி உள்ளுக்குள்ளே மிகவும் மகிழ்ந்திருந்தார்கள். அவள் கணவனோ பிறகு தன் மனைவியின் அருமைக் குணங்களைத் தெரிந்து, தன் மனைவியைக் கொன்றவர்கள் தன் தாயும் சகோதரியுமே என்று உண்மை உணர்ந்து துயரக் கடலுள் ஆழ்ந்தான். அப்பெண்மணியில்லாத அவ்வீடு பொலிவிழந்து வெறும் பாழாய்க் காணப்பட்டது. அவ் வீட்டிலுள்ளவர்கள் முகமெல்லாம் கருகிக் களையின்றி வற்றிப் பாழ் அடையலாயின. இராக்காலம் அவ்வீட்டினுள் அமைதி யில்லாததாயிற்று. பொல்லா நெஞ்சினரான மாமியும் நாத்துணாளும் நல்லுறக்கங்கொள்ளாமல் பெருந்திகிலால் துடித்தார்கள்.

இரவில் ஏதோர் ஓசையும் இன்றி யிருக்கையில் திடீரென்று ஓர் அழுகுரல் கேட்டது. பின்னுஞ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/112&oldid=1623403" இலிருந்து மீள்விக்கப்பட்டது