உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 3.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
80

❖ மறைமலையம் -3 ❖

சிறிது நேரத்தில் அவ்வோசை அடங்கி அவ்வீட்டில் யாரோ நடப்பது போலச் சரசரவென்னும் ஓர் ஒலி உண்டாயிற்று. பின்னுஞ் சிறிதுநேரத்தில் “ஐயோ! ஐயோ!! அடிக்கிறாளே! அடிக்கிறாளே!!” என்று பெருங் கூக்குரல் எழுந்தது. அது கேட்டதும், எல்லாரும் எழுந்து அவ்வோசை வந்தவிடத்திற்கே, ஓடிப்போய் பார்க்க, நாத்துணாள் தான் படுத்திருந்த விடத்தினின்றும் பரபரவென்று இழுக்கப்பட்டு உலக்கையால் அடிபட்டுக் கிடந்தாள். அவளை எடுத்துத் தேற்றி நடந்தது என்னவென்று கேட்க, “ஐயோ! இறந்துபோன அண்ணி இதோ வந்து என்னைப் பரபரவென்று இழுத்துப்போட்டு உலக்கையால் அடித்தாளே! அவ்வடி என்னால் தாங்க முடியவில்லையே! இதோ என்னை மறுபடியும் உருத்துப் பார்க்கிறாள்; பல்லைக் கடிக்கிறாள்; ஐயோ! என்ன செய்வேன்; இதோ மறுபடியும் உலக்கையை எடுக்கிறாளே!” என்று அவள் சொல்லும்போதே அங்கே ஓரிடத்திலிருந்த உலக்கையானது திடீரென்று அந்தரத்தில் வந்து அவள் முதுகில் தாக்கியது; சுற்றிலும் உள்ளவர்கள் அதைப் பிடித்தார்கள்; அங்ஙனம் அவர்கள் அதைப் பிடிக்கையில் அஃது அவர்கள் கையைவிட்டு நழுவிப் போயிற்று. இங்ஙனமே அந்த நாத்துணாளை இறந்து போனவளின் ஆவேசம் ஒவ்வோர் இரவும் வருத்துவாதாயிற்று. வீட்டிலுள்ள ஆண்மக்கள் எல்லாரும் எத்தனையோ பரிகாரங்களும் மந்திரங்களும் செய்து பார்த்தும் ஒன்றும் பயன்படவில்லை. நாளேற நாளேற அந்த வீட்டிற் கூக்குரல் மிகுதிப்படலாயிற்று. அந்த நாத்துணாள் தன் படுக்கையினின்றும் திடீரென மேலே தூக்கப்பட்டுப் பொத்தென்று கீழே வீழ்த்தப்பட்டாள்; அவள் உண்ணுஞ் சோற்றிலே அசுத்தமான பொருள்கள் வந்து வீழ்ந்தன; ஒவ்வொருநாள் விளக்குமாற்றால் அடிபட்டாள்; ஒவ்வொருநாள் அவள்மேல் சாணத்தண்ணீர் வந்து வீழ்ந்தது; ஒவ்வொருநாள் தடியால் அடிபட்டு அவள் உடம்பெங்குங் கன்றி இரத்தங் கட்டின; இவ்வாறு ஒரு மாதம்வரையில் அவள்பட்ட துன்பங்களுக்குக் கணக்கில்லை. இங்ஙனந் துன்பப்படும் போதெல்லாம், “இந்தப் பாவி என்னை அடிக்கிறாளே, கடிக்கிறாளே, உதைக்கிறாளே, சிதைக்கிறாளே” என்று சொல்லுவதும், இகழ்வதும், திட்டுவதும் அன்றி, அவள் உயிரோடு இருந்தபோது நாம் எவ்வளவு துன்பம் அவளுக்குச் செய்தோம் என்று சிறிதும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/113&oldid=1623404" இலிருந்து மீள்விக்கப்பட்டது