உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 3.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
84

❖ மறைமலையம் -3 ❖

செய்வானானால், அத்தீமை செய்தவனுக்குப் பிற்பொழுதில் அவசியம் வந்தே தீரும். மற்றக் கீழ்த்தர உயிர்கட்கு இல்லாப் பகுத்தறிவு பகுத்துணர்ச்சிகள் மனிதப் பிறவியில் காணப்படுதலால், அப்பகுத்தறிவுணர்ச்சி கொண்டு மனிதர் தமக்குத் தீங்கு செய்தார்க்குத் தாமும் இப்பிறவியிலேயே தீங்குசெய்ய முன் நிற்பர்; இப்பிறவியிற் செய்யலாகாவிட்டால் மறுபிறவியிற் சூக்குமசரீரத்திற் சென்ற மாத்திரையானே பழிக்குப்பழி வாங்குவர்; சூக்கும சரீரத்தினும் பழிவாங்க ஏலாவிட்டால் திரும்பவும் மனிதப் பிறவியிற் பிறந்து பழி வாங்குவர். எத்தனை பிறவி எடுத்தாயினும் பழிக்குப்பழி வாங்காமல் மாத்திரம் விடார்.

அது கிடக்க, சூக்குமசரீரத்திலும் பழி வாங்க ஏலா விட்டால் மறுபடியும் மனிதப்பிறவி எடுத்தாயினும் அதனை முடிப்பரெனக் கூறியதேன் என்றாற் கூறுகின்றாம். உடனே பழிக்குப்பழி வாங்குதலும், சிறிது பொறுத்துப் பழி வாங்குதலும், அல்லது அதுவுங் கழித்து வேறொரு மனிதப் பிறவியெடுத்தபின் அவ்வாறு செய்தலும் ஆகிய இவையெல்லாம் துன்புறுத்தப்பட்டவர் நிலைமைக்கும் அவர் அதனைத் தாங்கும் அளவுக்கும், அவர் மனத்தில் ஏறிய வைரத்திற்கும், அவர் அறிவின் வலிமைக்கும் ஏற்ற வகையாய் வந்து பொருந்தும். இவற்றுள் ஒவ்வொன்றையும் அடைவே விளக்கிக் காட்டுவோம்.

ஒருவன் தன்னிலும் மேம்பட்ட செல்வம் உடையார்க்குத் தீங்கு செய்வனானால் அவர் தமக்கு மிகுதியாய் உள்ள செல்வவளத்தால் பலரைத் தமக்குத் துணை கொண்டு தீங்கு செய்தவனை உடனே எளிதில் வருத்திப் பழியைத் தீர்த்துக் கொள்வர். இவ்வாறன்றி மிகுந்த செல்வம் உடையான் ஒருவன் தன்னினும் மிகத் தாழ்ந்த ஏழை ஒருவனுக்குத் தீங்கு செய்வன் ஆனால், அவ்வேழை தானும் அவனுக்கு உடனே தீங்கு செய்யமாட்டாமையின் தான் அது செய்தற்குச் சமயம் வாய்க்குந்தனையும் சும்மா இருப்பன்.

இன்னும் நல்லவர் ஒருவர்க்கு ஒருவன் தீங்கு செய்து வந்தால் அவர் தமது நற்குண மிகுதியால் அத்தீங்கினை ஒருபொருட் படுத்தாது அலட்சியமாய் விட்டிருப்பரா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/117&oldid=1623408" இலிருந்து மீள்விக்கப்பட்டது