உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 3.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ மரணத்தின்பின் மனிதர்நிலை ❖
119

அமைக்கப்பட்டிருப்பது போல் தோன்றினாலும் இது சீவதாது நிறைந்த நினைவின் வடிவேயன்றி வேறன்று. நீர் இப்போது நுழைந்திருக்கின்ற உலகத்தின் சீவமண்டிலமேயன்றிப் பிறிதன்று. இவ்வழியே செல்லும் ஒவ்வோர் உயிரும் இவ் வாயிலின் அழகை மிகுதிப்படுத்துதற்கு வேண்டும் நலத்தினைச் சிறிது கொடுத்துச் செல்கின்றது,’ என்று கூறினார். துறவியைச் சூழ்ந்துள்ள கதிரொளி வட்டத்தைப் போல வெண்மையும் நீலமுங் கலந்த வாயுமண்டிலம் என்னைச் சுற்றியிருக்கக் கண்டேன். இந்த நீலவாயு மண்டிலம் என்னைச் சூழத் திருத்தமான வடிவெடுத்தது; உடனே அவ் வாயிலின் ஊடே ஒரு வழி தென்பட்டது; அதில் யான் சென்றேன். பின்னர் அதனைத் திரும்பிப் பார்த்தேன்; மற்றோர் உயிர் அந்நிலத்திற் புகுந்தமைக்கு அடையாளமாக அவ் வாயில் அங்ஙனம் இருக்கும்படி விடப்பட்டது. அப்பொழுது அவ்வாயிலின் வளைவுகளும், அவற்றிற்கு அலங்காரமாய் அமைந்த உருக்களும், அவற்றில் எழுதப்பட்ட வடிவங்களும் வரவரக் குரல் ஒலி காட்டுவனபோற் றோன்றிப்,பிறகு தெளிவான இசையில் என் உயிரை நல்வரவேற்றன. இதற்குமுன் யான் கேட்ட இசையுள் இது சேர்ந்ததாயில்லை; இசைக்கருவியிலிருந்து எழும் ஒலி போலிருந்தது. செவிப்புலனால் அல்லாமல் உயிரின் அறிவால் மாத்திரம் கேட்கப்படுவதாயுள்ள முதிர்ந்த நினைவின் சைப்பொருத்தத்தையே அது பெரிதும் ஒத்திருந்தது.

என் ஒரே தோழரும் யானுமாகப் பின்னுஞ் சென்றோம்; ஏனெனில் யான் பார்த்த மற்ற ஆவிகள் எல்லாம் இப்போது மறைந்து போயின. பின்னும் யாங்கள் அப்பாற் சென்றோம். இவ் வேளையில் அகன்ற ஓர் அதிசயமான இடம் என் காட்சிக்குப் புலனாயிற்று. இரண்டு பக்கங்களிலும் பெரிய மலைவீழ் ஆறுகள் பள்ளத்தாக்குகளிற் சுழன்று சென்றன; அழகிய அருவிகள் மலைப் பக்கங்களில் துள்ளிக் குதித்தன. சூக்கும உலகத்திலுள்ள எமது இருப்பிடத்திற்கு இது நுழைவாயி லாகுமென்று நினைவு கூர்ந்தேன். இரண்டு மலைத்தொடர்களுக்கும் நடுவே ஊர்தி ஏதுமில்லாமலே நாங்கள் வாய் பேசாது மிகு விரைவாய்ச் சென்று, ஒரு திறந்தவெளியிற் சேர்ந்தோம். சூக்கும உலகத்தில் நாங்கள் இருப்பதற்காகத் தெரிந்தெடுக்கப்பட்ட இடம் இங்கேதான் இருந்தது. ஓர் அறைக்குச் செல்லும் வாயிலைப் பார்க்கிலும் அகன்றதல்லாத ஓர் ஒடுக்கமான பாதையில் நாங்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/152&oldid=1623966" இலிருந்து மீள்விக்கப்பட்டது