உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 3.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
120

❖ மறைமலையம் - 3 ❖

புகுந்தபோது,உரத்த பாறையென்று காணப்பட்ட ஒன்றிலிருந்து புதுமையான பல பாவைகளும் படிவங்களும் மங்கலாய்த் தோன்றுவதை யான் குறிப்பாய்ப் பார்த்தேன். இப் பாவைகள் பழக்கமான முகங்களும் உருவங்களும் உடையனவா யிருத்தலும், மனத்திற்குப் புலனாயுள்ள பொருள்களையும் எண்ணங்களையும் சொற்களையும் போற் றோன்றுதலும் கண்டேன். எனதுயிர் வாழ்நாளில் உண்டான ஒவ்வொரு நினைவையும் ஒவ்வொரு செயலையும் யான் பார்த்தேன். அவைகளிற் சில நிழலுள்ளனவாயிருந்தன; வேறு சில மிக இன்பமான உருவங் களுடையனவா யிருந்தன; இன்னுஞ் சில பகைமையுங் கொடுமையும் வாய்ந்த சாயலுடை யனவா யிருந்தமையால் அவற்றை மறந்து விடுவதில் விருப்பமுடையேனாயிருந்தேன்; பின்னுஞ் சில இகழ்ச்சிக்கும் சினத்திற்கும் இணங்கின வாயிருந்தன; ஆனால், இன்னும் முன்னே யான் சென்றபோது மேலான அன்புள்ள முகங்களும் வடிவங்களும் நிரம்பவும் மிகுதியாயிருக்கவும், யான் உயிருள்ள ஆவியாய் அத் திறந்தவெளியிற் சென்றதும் அன்போடும் இரக்கத்தோடுங் கூடியவற்றை அல்லாமல் வேறுருவங்கள் இல்லாதிருக்கவும், மகிழ்ச்சி நிறைந்தவற்றை அல்லாமல் வேறொலிகள் இல்லாதிருக்கவுங் கண்டேன்.

ஒரு மங்கையின் கழுத்தணியில் தனித்தனியே பதிக்கப்பட்ட முத்துக்களைப்போல ஒவ்வொரு துளியும் அத்தனை தெளிவாக வுள்ள ஒரு நீரோட்டத்தில் யான் இங்கே அமிழ்ந்தினாற்போற் காணப்பட்டது. இத்துளிகள் ஒவ்வொன்றும் சில அன்பான நினைவை அல்லது தெளிவான சாரத்தை உள்ளடக்கி நிற்பதுபோல் தோன்றியது; இந்த நீரோட்டத்தில் யான் அமிழ்ந்தினதும், மண்ணுலகத்தில் உண்டான கறைகள் சிலவற்றை எடுத்துவிடுவதுபோல ஒவ்வொரு துளியும் என் நுண்ணுடம்பில் கொட்டினது. அந் நீரோட்டத்தில் நெடு நேரம் யான் இருக்க இருக்க அதனைத் தாங்கிக் கொள்வது எனக்கு எளிதாயிற்று. முதலில் அது நெருப்பைப் போற் சுட்டுக் கொளுத்துவதாகக் காணப்பட்டது; பின்னர் அது மேலும் மேலும் இனியதாகி ஒவ்வொரு துளியும் என் உள்ளத்திற் சில உண்மைகளைத் தெரிவித்து என்னுடன் பேசக் கண்டேன். கடைசியாக அதன் மற்றப் பக்கத்தில் யான் மேலெழுந்தவுடனே, என் தோழரால் புன்சிரிப்போடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/153&oldid=1623967" இலிருந்து மீள்விக்கப்பட்டது