உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 3.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ மரணத்தின்பின் மனிதர்நிலை ❖
121

வரவேற்கப்பெற்றேன். ‘இஃது உமது மண்ணுடம்பின் கடைசியாக உள்ள கறைகளை நீக்குகின்றது; ஆயினும், நீர் மண்ணுலகிற் செய்த எல்லாப் பிழைகளின் முடிவான பயன்களையும் இது நீக்குகின்றிலது,’ என்று அவர் மொழிந்தார். அந்த அம்மையாருக்கும் எனக்கும் உள்ள சில வித்தியாசம் என் உணர்வுக்குத் தென்படலாயிற் றென்றும், அவ்வம்மையின் நிலைமையை யான் இன்னும் முற்றும் அடையவில்லை யென்றும், ஆனாலும் அந்த இனிய நீரோட்டத்தில் முழுகியதிலிருந்து யான் மிகுந்த அறிவையும் மிகுந்த கல்வியினையும் எய்தி எனக்கிருந்த குறைபாடுகள் படிப்படியே நீங்கப்பெற்றேனென்றும் தெரிந்துகொண்டேன்.

இந்த நிலத்தின்மேற் பெயர் அறியப்படாத மலர்களால் இருபுறத்தும் அலங்கரிக்கப்பட்டுள்ள ஓர் அழகிய கொடிப் பந்தருக்கு அவ்வம்மையார் என்னைப் பின்னர் வழி நடத்திக் கொண்டு சென்றனர். நீங்கள் பார்த்துப் பழக்கப் பட்டிருக்கிற வடிவங்களும் உருவங்களும் அவைகள் அல்ல; அவைகளின் மணங்களே செவிகளுக்கு இனிய ஓசைகளைத் தருகின்றன; அவற்றின் உருவங்களும் நிறங்களுமோ சில எண்ணங்களையும், வழுத்துரைகளையும், உயர்ந்த நாட்டங்களையும் தெரிவித்தன. எங்கள் இருப்பிடத்தின் வாயிலுக்கு இன்னும் அருகில் அவ்வம்மையார் என்னை அழைத்துச் சென்றனர். அதன் வடிவையும் உருவையும் யான் பார்க்கக் கூடியதாயிருந்தது.அதன் சுவர்களையும் வாயிலையும் யான் உங்களுக்குத் தெளிவாய்ச் சொல்லிக் காட்ட முடியும். அதன் உருவமைப்பில் யான் கண் ஒவ்வொரு வடிவிலும், என்னுடனிருந்த அவ்வம்மையாரின் இயல்புகளை யான் தெரிந்துகொள்ளக் கூடியதா யிருந்ததென்று சொல்லுவதைத் தவிர மற்றொன் றையுஞ் சொல்லி உங்களை இங்கே வீணே நிறுத்திவைக்க மாட்டேன். அவ்வம்மையார் இங்கிருந்த காலத்திலும் சூக்கும உலகத்திலும் அவர் தமக்கு வழக்கமாயுரிய எண்ணங்களால் அஃது அலங்கரிக்கப்பட்டிருந்த தன்பதை யான் காணக் கூடியதாயிருந்தது. இறைவனை வழுத்திய ஒவ்வொரு சொல்லும் செயலும், நல்நாட்டமும், உருக்கமான அறச் செய்கையும் இவ்வுறையுளில் உருவு கொண்டிருந்தன. என்னுடைய எண்ணங் களுங்கூட அங்கு இடையிடையே பின்னப்பட்டிருத்தலைக் கண்டேன். யான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/154&oldid=1623968" இலிருந்து மீள்விக்கப்பட்டது