உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 3.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ மரணத்தின்பின் மனிதர்நிலை ❖
127

என்பவர் நிற்கக் கண்டேன். தமது இரத்தவெறி அடங்கப் பெற்றமையால் இப்போது தேசமாந்தரின் வளத்தையும் சுகத்தையும் கோரிக்கொண்டு மற்றக் கூட்டங்களின் நடுவே நிற்பவரான நெப்போலியன் என்பவரையும் சீசர் என்பவரையும் கண்டேன். ஒளிவிளங்கு முகங்களும் கதிர் விளங்கும் புருவங்களும் உடையோராய், ஐக்கிய மாகாணப் பெருங்கழகத்தில் சுதந்திர உணர்ச்சி நடைபெற்றாற்போல அவ்வத் தேசக் குடிமக்களின் சட்ட நிருமாணக் கூட்டங்களில் இயங்குதற்கு விருப்பம் வாய்ந்த பெரிய ஆவேசக் கூட்டத்தார்க்கு அவர்கள் கற்பித்துக் கொண்டிருத்தலைக் கண்டேன். சுதந்திர விருப்பம் வாய்ந்தமையால் இலிங்கன் என்பவர் ஆவியுருவில் எழுந்துலவு தலையுங் கண்டேன்; கதிர் விடும் அவ் வொள்ளிய கூட்டத்தில் மாந்தரின் திருத்தத்திற்குரிய இன்னும் பெரிய ஏற்பாடு களெல்லாம் செய்யப்படுதலையுங் கண்டேன். முன்னே இறந்து போன சார்லஸ் சம்நர் என்பவர் ஆவியுலகத்தில் எழுந்து இங்கே போல அங்கும் அடிமைகளின் சுதந்திரத்தைப் பற்றி வழக்கிடக் கண்டேன்.

இப்போது யான் உங்களுக்குத் தெரியப்படுத்தக் கூடாத இன்னும் பலரையுங் கண்டேன்; அவர்கள் எனக்கு அறிமுகம் உள்ளவர்களே; ஆனாலும் அவர்களுடைய உணர்வும் எண்ணமும், எனக்குப் புதியவாய்த் தோன்றின. என் உட்கருவிகளின் அளவுக்கு மேற்பட்டனவாய் இருத்தலை யறிந்தேன். என்றாலும்,யான் இத் தோற்றங்களிற் பழகப்பழக, எத்தனையோ ஊழிக் காலங்களாக அறிவில் முதிர்ந்து வந்த ஆன்றோர் திருவடிக்கீழ் இருந்து உபதேசங் கேட்டுவரும் கூட்டத்தாரிடையில் யான் சேரச்சேர, யான் இங்கிருந்த காலையிற் செய்ய மாட்டாமலிருந்த ஒரு பெரு முயற்சியைச் செய்யவல்லவனாவேன் என்று சொல்லக்கேட்டேன்; அதனை யான் இம் மண்ணுலகத்திற் செய்ய மாட்டா மலிருந்தது ஊனுடம்பின் வலிவின்மையானும் வரையறைப்பட்ட கருவிகளின் இயல்பினானுமேயாம்; ஆயினும், யான் அம் முயற்சியில் மிகுந்த ஆவல் உடையேனா யிருந்தேன் என்பதை நீங்கள் எல்லோரும் அறிவீர்கள். எனது வேலை இனி மேற்றான் தொடங்க வேண்டுவதாய் இருக்கின்றது. இனி என்னுடைய முயற்சிகளும் எண்ணங்களு மெல்லாம் யான் அறிவு பெறுதலிலும், யான் பெற்ற அவ் வறிவை அறியாமையிற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/160&oldid=1624394" இலிருந்து மீள்விக்கப்பட்டது