உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 3.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
128

❖ மறைமலையம் - 3 ❖

கட்டுப்பட்டுக் கிடக்கின்றவர்களுக்கு எடுத்துப் புகட்டுவதிலும் குவிந்து நிற்கின்றன. ஒவ்வொரு மனிதருக்குங் கொடுக்கப்பட்டிருக்கின்ற அறிவென்னும் பெருங் கொடையானது எல்லாவற்றையும் அரித்து வரும் காலத்திற்கும் அகப்படாமல் பிழைத்திருத்தலும், காலமும், உடம்பும் அழிந்துபோகத் தான் அழியாமல் தனக்குரிய ஆவி மண்டிலத்தில் தன்னிருப்பிலிருத்தலும் எவ்வளவு வியப்பாகவும் தெய்வத்தன்மை வாய்ந்ததாகவும் குறைவற்றதாகவும் இருக்கின்ற தென்பதை யான் உணர்ந்தேன். இன்னும், ‘ஓ! யான் விட்டுவந்த மாந்தர்கள் தமது அகக்கண் திறக்கப்பெற்று யான் காண்பதுபோலக் காண்பார்களாயின் யான் இப்போது அறிவதைப் போலத் தாமும் அறிவராயின், எத்தனையோ ஊழிக் காலங்களாகக் கவிந்து கொண்டு வரும் மரண பயத்தினின்றும் நீங்கி எவ்வளவு பேரின்பங்களை அடைவார்கள்! அவர்கள் நித்திய வாழ்வினையும் அமிருதத்தையும் நேருக்கு நேர் காண்பரல்லரோ!’ என்று உணர்வேன் ஆனேன்.

ஆனால், இங்கே முழுதும் இன்பநுகர்ச்சியே உள்ளதன்று. மறுபடியும் என் குறைபாடுகளை உணரலானேன்; இவ்வுணர்ச்சி தோன்றியதும் என் உள்ளம் கிளர்ச்சி குன்றித் துன்ப முறலாயிற்று. அவர்கள் எவ்வளவுதான் என்னை வரவேற்று மகிழ்ந் தாலும், ‘நான் என்ன குழந்தையா யிருக்கின்றேனே!’ என்று எண்ணினேன். ஊழி ஊழியாக அறிவுமிகப்பெற்ற ஆன்றோர் நடுவிலிருந்து கொண்டு இங்ஙனம் யான் உணரவே ஒரு சிறு பிள்ளையைப் போலக் கூச்சம் எய்தி என் உள்ளத்தின் வெறுந்தன்மையை நினைந்தேன். அதன்பிறகு யான் முன்னே கண்டறியாத ஏதோ ஓரிடத்திலிருந்து உருவங்கள் பல வெளி வந்து என் எதிரே மண்டியிட்டு, ‘ஆன்மதத்துவ வாழ்க்கையைப் பற்றித் தாங்கள் எனக்கு முதன் முதற் கற்பித்தீர்கள்; மண்ணுலகத்திலிருந்தபோது முதன் முதற் றங்களிடத்திருந்தே உயிரின் இருப்பைப்பற்றி யான் அறிவுகூடப் பெற்றேன்,’ என்று ஒவ்வொன்றாய்ச் சொல்லிக்கொண்டே என் அடிகளின்மேல் ஒவ்வொரு மலரை இட்டன. புகழ்ப் பாட்டுகளும் வேண்டு கோள் மொழிகளும் வந்ததுபோலவே, அப் பூக்களோடு நறிய சாம்பிராணிப் புகையும் வந்தது. இந் நிவேதனங்களை என்னுள்ளம் உறிஞ்சி யுட்கொள்ளவே, யான் வீரியம் மிகப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/161&oldid=1624400" இலிருந்து மீள்விக்கப்பட்டது