உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 3.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

136



19. வேறு பல உலகங்கள்

இனி இந்நிலவுலகத்தைத் தவிர வேறு பல உலகங்கள் உண்டென்பதற்குப் பிரமாணம் என்னை யெனின்; முற்காலத்தில் வராக மிகிரர் முதலான வானநூல் வல்லார் எழுதிய உண்மைகளும், இக்காலத்து வானநூற் புலவர்கள் புதிய புதியவாக ஆராய்ந்துரைக்கும் மெய்ப் பொருள்களுமே சான்றாம். நமக்குப் பகலில் வெயில் வெளிச்சத்தையும் இரவில் நிலவு வெளிச்சத்தையும் தரும் சூரியமண்டில சந்திரமண்டில இயற்கைகளைச் சிறிது ஆழ்ந்து சிந்தித்துப் பார்ப்பவர்க்கு வானிற் சுழலும் உலகங்களின் தன்மை சிறிதேனும் தெரியாமற் போகாது. நம் கட்புலனுக்கு நாடோறும் விளங்கித் தோன்றும் இவ்விரண்டைவிட இன்னும் எத்தனையோ மடங்கு பெரியனவான உலகங்கள் பற்பல இருப்பினும் அவை மனத்திற்கும் எட்டாத் தொலை தூரத்தில் உலவுதலால் அவைகள் நம் ஊனக் கண்களுக்குத் தென்படுவதில்லை; இருட்காலத்திரவில் வானத்தில் இறைக்கப்பட்ட முத்துக்கள் போற் றோன்றும் வான்மீன்களில் இச் சூரிய சந்திர மண்டிலங்களைப் பார்க்கிலும் எவ்வளவோ பங்கு பெரியனவாயுள்ள உலகங்கள் கணக்கில்லாமல் இருக்கின்றன. அவற்றுள் ஒரு சிலவற்றைப் பற்றிப் பின்னே பேசுவோம். அவையெல்லாம் சூரிய சந்திர மண்டிலங்களைவிட நெடுந்தூரங்களிற் செல்லுதலால், நம்முடைய கண்களுக்கு முத்துக்களைப் போல் அவ்வளவு சிறியனவாய்த் தோன்றுகின்றன. சூரிய சந்திர மண்டிலங்களோ நமது மண்ணுலகத்தை விட மிகப் பெரியனவாய் இருத்தலோடு, மற்றை வான் மீன்களைவிட அருகிலுஞ் சுழலுதலால் அவை நம் விழிகளுக்குத் தெளிவாய்ப் புலப்படுகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/169&oldid=1624588" இலிருந்து மீள்விக்கப்பட்டது