உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 3.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ மரணத்தின்பின் மனிதர்நிலை ❖
135

வழங்குவான் அவ்விறைவன் ஒருவனே யல்லது வேறு பிறர் இல்லை யென்றும், அவ்விறைவன் திருவருளைப் பெறுதற்குரியரான எல்லாவுயிர்களும் ஓரினமாதலால் அவர் தமக்குள் இருவினை வயத்தால் நேர்ந்த வேறுபாடுகளை நோக்காது ஒரே தந்தைக்குப் புதல்வராம் இயைபை நினைந்து உளம் உருக நேசித்து ஒருவர்க் கொருவர் உதவியாய் நின்று ஒழுகுதலே செயற்பால தென்றும், நிலையில்லாத இவ்வுலக வாழ்க்கையில் வினை வயத்தாற் பிறந்த நிலையில்லாத வேறுபாடுகளையே பெரியனவாகக் கருதி ஒருவரை யொருவர் மனம் வாக்குக் காயங்களால் ஒரு சிறிதேனும் தாழ்த்த முயலுதல் பெருங் குற்றமாமென்றும் இங்ஙனமெல்லாம் விரிந்த நோக்கத்தோடும் பேரறிவோடும் மிகக் குழைந்த பேரன்போடும் தமதுயிரை இம் மண்ணுலகில் இருக்கையிலேயே தூயதாக்கிக் கொண்ட சான்றோர் சிலர் மாத்திரமே இதனைக் கடந்து மேலுலகங்களுக்குச் சென்ற வழியும் எல்லாம் வல்ல ஒரு பேர் இறைவனை நேர் முகமாகக் காணப்பெற்று எல்லா மண்டிலங்களையும் அம்மண்டிலங்களில் உலவும் எல்லா வகையான ஆவி வடிவங்களையும் காண்குவர். ஏனையோர்க்கு இவ்வரும் பெரும் பேறு வாயாது. இது நிற்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/168&oldid=1624587" இலிருந்து மீள்விக்கப்பட்டது