உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 3.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
154

❖ மறைமலையம் - 3 ❖

தனித்தனி வேறு வேறாகவே எஞ்ஞான்றுங் காணப்படும். இப் பொருள்களின் மேலிருந்து வரும் ஒளியை மேற்சொன்ன பளிங்குத் துண்டினூடே நுழைய விட்டு அப்புறம் பார்த்தால் இவ்வுலோகங்கள் ஒவ்வொன்றும் தன்னித்தனி வெவ்வேறு நிறம் உடையதாதலை நன்கு கண்டுணரலாம். இங்ஙனம் கண்டுணர்ந்த பின், ஒருவர் இவ் வுலோகங்களை நம் கண்ணெதிரே காட்டாமல் மறைவிற் பிடித்துகொண்டு அவ் வுலோகங்களின் ஒளியை மாத்திரம் நாம் வைத்திருக்கும் பளிங்குத் துண்டினூடே புகவிடுவராயின்,அத்துண்டின் புறத்தே தோன்றும் நிறங்களைக் காண்டு அவர் மறைவிற் பிடித்திருக்கும் உலோகங்கள் இன்னின்னவை யென்று உறுதியாகச் சொல்லலாம். இங்ஙனமாகிய ஒளியாராய்ச்சியை இஞ்ஞான்றை இயற்கைப் பொருள்நூலார் இன்னும் நுட்பமாக நடத்துதற் பொருட்டு, மேற்சொன்ன பளிங்குத்துண்டுகளைத் திறம்பட அமைத்த பளிங்குக்காட்சி*(Spectroscope) என்னும் ஓர் அரிய கருவியினை இயற்றியிருக்கின்றார்.மிகச் சிறந்த இக்கருவியி னுதவி கொண்டு க் வானின்கண் உலவும் மண்டிலங்கள் பலவற்றிலிருந்து வரும் ஒளியைப் பார்த்து அம் மண்டிலங்களில் உள்ள பொருள்கள் இவ்விவைதாம் என்று உறுதிப்படுத்தி யுரைக் கின்றார். இனி இவ் வியல்பிற்றாகிய ஒளியாராய்ச்சியை ஞாயிற்று மண்டிலத்தின் கட் சலுத்திப் பார்த்தவிடத்து, அம் மண்டிலத்தில் ஏராளமான இருப்புக் கனிகள் உண்டென்பது புலப்படலாயிற்று. சூரியனாகிய இரண்டடி உயரமுள்ள ஒரு பந்திற்குப் பட்டாணிக் கடலை யளவினதாகிய இந்நிலவுலகத்தின் கண் ஆறறிவுடைய மக்களுக்குப் பலவகையானும் பயன் பட்டுவரும் இருப்புக் கனிகள் மிகுதியாய்க் காணப்படுமாயின், இதனினும் எத்தனையோ கோடிமடங்கு பெரிதான ஞாயிற்று மண்டிலத்தின்கண் உள்ள இருப்புக் கனிகளின் ஏராளமான அளவை எங்ஙனம் கணக்கிட வல்லேம்! அங்ஙனந் திரளாக இருக்கும் அத்தனை இருப்புக் கனிகளும் ஞாயிற்று மண்டிலத்தில் உயிர்வாழும் சிறந்தோர்க்குப் பயன்படுமாறு அமைக்கப் பட்டனவென்று சொல்லுதல் அல்லால் வேறு யாது சொல்லக் கூடும்? இன்னும் இங்ஙனமே உவர்க்காரம் காந்தம் சுண்ணாம்பு முதலியனவும் ஞாயிற்று மண்டிலத்தில் இருக்கின்றன; செம்புந் துத்தநாகமுங்கூட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/187&oldid=1624933" இலிருந்து மீள்விக்கப்பட்டது