உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 3.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ மரணத்தின்பின் மனிதர்நிலை ❖
155

அங்கேயுள்ளன. ஆனால் இவை இரும்பு உவர்க்காரம் முதலியவற்றை விடக் குறைந்த அளவினவாகவே காணப்படுகின்றன. பளிங்குக் காட்சியினால் துணியப்பட்ட இவ் வுலோகங்களைத் தவிர மற்றவை ஞாயிற்றுமண்டிலத்தில் இல்லையென்று சொல்ல முடியாது. ஏனென்றால், அம் மண்டிலம் நமது நிலவுலகத்திற்கு மிகவும் நெடுந்தூரத்தி லிருத்த லால், அங்கே பெருந்திரளா யிருக்கும் பொருள்களின் ஒளியே இங்குக் காணப்படும்; அளவு சுருங்கிய பொருள்களின் ஒளி இங்கே தோன்ற மாட்டாது. என்றாலும், ஆறறிவுடைய மாந்தர்க்குப் பலவகையானும் பயன்படும் இரும்பு,செம்பு,துத்தநாகம் முதலான உலோகங்கள் அங்கு இருத்தல் தெளியப் பட்டமையால், அவற்றோடு இனமான பொன்,வெள்ளி,ஈயம் முதலான ஏனை யுலோகங்களும் அவற்றின் சிறிது குறைந்த அளவினவாக ஆண்டுள்ளன வென்பதும் உய்த்துணரப்படும்.

இனி ஞாயிற்று மண்டிலம் இயற்கையில் ஒளியுடைப் பொருளாயிருத்தலின் அங்கிருந்து வரும் அதன் ஒளியைப் பளிங்கு காட்சியினாற் பகுத்துப்பார்த்து அங்குள்ள பொருள்கள் இவ்விவைதாமென்று உறுதிப்படுத்தல் இயலுகின்றது. ஞாயிற்றைச் சூழ்ந்து செல்லும் மற்றை மண்டிலங்களிற் சில அதுபோல் ஒளியுடைப் பொருள் அல்லாமையால், பளிங்குக் காட்சியி னுதவிகொண்டு அவற்றின்கண் உள்ள பொருள்கள் இவைதா மென்று நிலையிட்டுரைத்தல் ஏலாமையா யிருக்கின்றது. ஆயினும், ஞாயிறும் ஞாயிற்றைச் சூழ்ந்து செல்லும் மண்டிலங்களும் ஓரினப் பொருள்களாதலால், அவற்றுள் நடுநின்று சிறந்ததாய் விளங்கும் ஞாயிற்றிலே காணப்படும் பாருள்கள் அதனோ டினமான ஏனை யுலகங்களினும் உண்டென்பது பெறப்படும். இதற்கு, ஞாயிற்றைச் சூழ்ந்து செல்லும் உலகங்களில் ஒன்றான நமது நிலமண்டிலத் துள்ள பொருள்களும் ஏறக்குறைய ஒத்த இயல்பினவாய் இருத்தலே சான்றாகும்.

பளிங்கு காட்சியி னுதவிகொண்டு மற்ற உலகத்துப் பொருள்களின் இயற்கை தெளியப்படாதாயினும், வேறொரு வகையால் அது புலப்பட்டுவருகின்றது. அஃது யாதெனிற் கூறுவாம். மற்ற உலகத்துப் பொருள்களிற் சில பகுதிகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/188&oldid=1624937" இலிருந்து மீள்விக்கப்பட்டது