உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 3.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
156

❖ மறைமலையம் - 3 ❖

ஆங்காங்குள்ள எரிமலைகளின் கிளர்ச்சியாலும் வேறுசில காரணங்களாலும் அங்கு நின்றும் பிரிக்கப்பட்டு ஆகாயத்தில் உலவிக் கொண்டிருக்கின்றன. அவை நமது மண்ணுலகத்தினருகாமையில் உலவ நேருகையில் இதனால் இழுக்கப்பட்டு இதன்கண் வந்து விழுகின்றன. இவற்றையே ‘ஆகாயக்கற்க’ ளென்று வழங்கி வருகிறார்கள். இக் கற்கள் இராக்காலத்தில் பச்சை, நீலம், சிவப்பு, மஞ்சள் முதலான ஒளிகளோடு எரிந்து கொண்டு கீழ் விழுதலைப் பலர் பார்த்திருக்கலாம். இவற்றை இக் காரணம் பற்றி ‘எரிகொள்ளி’ என்றுஞ் சொல்வதுண்டு. இவ்வாறு கீழ்விழும் கற்களைத் தொகுத்து வைத்துக் கொண்டு இவற்றை ஆராய்ந்து பார்த்த இரசாயனநூல் வல்லார், இந் நிலவுலகத்துப் பொருள்களின் தன்மையே ஏனையுலகத்துப் பொருள்களினுங் காணப் படுகின்றதென உரை நிறுவுகின்றார்கள். இவ் வாராய்ச்சி முறையால் நோக்கும் வழியும் மற்றவுலகத்துப் பொருளமைப்பிற்கும் நமது நிலவுலகத்துப் பொருளமைப்பிற்கும் வேறுபாடு மிகுதியாய் இன்றென்பது தெற்றென விளங்கா நிற்கும்.

இன்னும் நமது நிலவுலகத்திற்போலவே செவ்வாய் மண்டிலத்திலும், வெள்ளி, வியாழன், சனி மண்டிலங்களினும் மழைபெய்தற்குக் காரணமான நீராவி சூழ்ந்திருக்கின்றதென்பதை வானநூல் வல்லார் பளிங்குக் காட்சியினுதவி கொண்டு இனிதறிந் திருக்கின்றார்கள். அதனால் அம் மண்டிலங்களில் தண்ணீர் மிகுதியாய் உண்டென்பதும் துணியப்பட்ட முடிவாகும். மக்களும் பிறவுயிர்களும் உயிர் வாழ்தற்கு இன்றியமையாப் பொருளான தண்ணீரை அவ்வுலகங்களில் அமைத்த முதல்வன் அவ்வுயிர்களை அங்கு அமையா தொழிவனோ?

இனி இதுகாறும் ஆராய்ந்து வந்த ஞாயிற்று மண்டிலமும் அதனைச் சூழ்ந்தோடும் எட்டு மண்டிலங்களுமே யல்லாமல், இவற்றினும் மிகமிகப் பெரியனவாய் இவற்றினும் நெடுந்தூரத்திற் சுழல்வனவாய் உள்ள பல ஞாயிறுகளையும் அவற்றைச் சூழ்ந்தோடும் பற்பல உலகங்களையும் இஞ்ஞான்றை வான்நூற் புலவர்கள் நுண்ணிய பல கருவிகளி னுதவிகொண்டு ஆராய்ந்து அவற்றின் தன்மைகளை விளக்கி வருகின்றார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/189&oldid=1625161" இலிருந்து மீள்விக்கப்பட்டது